பொன்முடி OUT... திருச்சி சிவா IN: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை
திமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சிவா, திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசிய காணொளி ஒன்று சர்ச்சையாகிய நிலையில், திமுக கட்சியில் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து இன்று காலை நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, பொன்முடி வகித்து வந்த திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், பல அமைச்சர்களின் செயல்பாடுகள் பொது வெளிகளில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகின்றனர். சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சைவமா? வைணவமா? என அநாகரீகமாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில், கட்சியில் பொன்முடி வகித்த பதவியினை பறித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி திமுகவின் கழக துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், பொன்முடி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுகவின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். பொன்முடி நீக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள், திருச்சி சிவாவிற்கு புதிய பொறுப்பு வழங்கப்படுவதாக மற்றொரு அறிவிப்பு திமுக சார்பில் வெளியிடப்பட்டது.
தமிழக முதல்வருமான, திமுகவின் தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுத்தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ”கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-ன்படி, கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி., அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்படுகிறார்” என வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






