விடிய விடிய நடந்த பணி...ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்...ஃபுல் செக்யூரிட்டி !

துப்பாக்கி ஏந்திய இந்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் என 5 அடுக்கு பாதுகாப்பானது ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

Apr 20, 2024 - 11:29
விடிய விடிய நடந்த பணி...ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்...ஃபுல் செக்யூரிட்டி !

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுச்செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 

தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலான இடங்களில் நேற்று(ஏப்ரல் 19) மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. அதன்பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளில் இருந்து ஸ்ட்ராங் ரூம் கொண்டு செல்லப்பட்டன. 

ஸ்ட்ராங் ரூம் என்பது, தேர்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் பலத்த பாதுகாப்புடன் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும், அவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டு விடும். அதன்பின் இரவு பகலாக துணை ராணுவத்தினர் வாக்கு எண்ணிக்கை நாள் வரை அதனை பாதுகாப்பார்கள். 

அதன் அடிப்படையில் வட சென்னைக்கு ராணி மேரி கல்லூரியும், தென் சென்னைக்கு அண்ணா பல்கலைக்கழகமும், மத்திய சென்னைக்கு லயோலா கல்லூரியும் ஸ்ட்ராங் ரூம்களாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாக்குச்சாவடி மையங்களில் இருந்து ஸ்ட்ராங் ரூம்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி நேற்று மாலை துவங்கி இன்று காலை வரையில் விடிய விடிய நடைபெற்றது. 

அதன்படி, ஒவ்வொரு அறைக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் அறைகளின் கதவுகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது,. தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய இந்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் என 5 அடுக்கு பாதுகாப்பானது ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணும் நாள் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow