எது.!! சென்னையில் ஓட்டுக்கு பணமா..? 5 இடங்களில் ஐ.டி அதிரடி ரெய்டு..!
வருமான வரித்துறை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, பணப்படுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் வந்ததையடுத்து, 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காக, வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு அறைக்கு, கொண்டித்தோப்பு, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.
அதன்படி, சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் வசித்து வரும் ஹிந்தாராம் சவுத்ரி என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கொண்டித்தோப்பு சக்கரை செட்டி தெரு, ரைஸ்மில் தெரு ஆகிய பகுதியில் உள்ள வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை ஓட்டேரி நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதனால், சோதனை நடைபெறும் இடங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், அதுவரையில் வருமான வரித்துறை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, பணப்படுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?