தேர்தல் நன்கொடை : ரூ.3,112 கோடி அள்ளி குவித்த பாஜக: காங்கிரசு வெறும் ரூ. 299 கோடி தான் !
அரசியல் கட்சி நன்கொடை பெறுவதில் பாஜக ரூ 3112 கோடி பணத்தை அள்ளி குவித்துள்ளது. பிரதான எதிர்கட்சியான காங்கிரசு வெறும் ரூ. 299 கோடி மட்டும் நன்கொடையாக பெற்றுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்கள், தொழிலதிபர்கள் ரகசியமாக நன்கொடை வழங்கி வந்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை' எனக் குறிப்பிட்டு, அத்திட்டத்தை, கடந்தாண்டு பிப்ரவரியில் ரத்து செய்தது.
தற்போது, தேர்தல் பத்திரங்களுக்கு பதிலாக தேர்தல் அறக்கட்டளை மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் பெற்று வருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிந்தைய, 2024 - 25ம் நிதியாண்டில், ஒன்பது தேர்தல் அறக்கட்டளைகள் மட்டும் மொத்தம், 3,811 கோடி ரூபாயை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி இருந்தன.
இதில், 82 சதவீதம், அதாவது, 3,112 கோடி ரூபாய் பா.ஜ.,வுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரசுக்கு, வெறஉம் 8 சதவீதம், அதாவது, 299 கோடி ரூபாய்; மீதமுள்ள, 10 சதவீதம், அதாவது, 400 கோடி ரூபாய், இதர அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
'புருடென்ட்' என்ற தேர்தல் அறக்கட்டளை மட்டும், 2024 - 25ம் நிதியாண்டில், பா.ஜ.,வுக்கு, 2,180 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு, 'பார்தி ஏர்டெல், ஜிண்டால் ஸ்டீல், மேகா இன்ஜினியரிங், டொரண்ட் பார்மா' போன்ற முன்னணி நிறுவனங்கள் நன்கொடை வழங்கிஉள்ளன.
'டாடா' குழுமத்தால் நிர்வகிக்கப்படும், 'புரோகிரசிவ்' தேர்தல் அறக்கட்டளை வசூலித்த 917 கோடி ரூபாயில், 80.82 சதவீதத்தை, அதாவது 739 கோடி ரூபாயை பா.ஜ.,வுக்கு கொடுத்துள்ளது.
'நியூ டெமாக்ரடிக்' என்ற தேர்தல் அறக்கட்டளை, 'மஹிந்திரா' குழும நிறுவனங்களிடமிருந்து பெற்ற 160 கோடி ரூபாயில், 150 கோடி ரூபாயை பா.ஜ.,வுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

