புதுச்சேரியில் ரூ.3.53 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.. எங்கு கொண்டு செல்லப்பட்டது?!

Apr 10, 2024 - 08:12
புதுச்சேரியில் ரூ.3.53 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.. எங்கு கொண்டு செல்லப்பட்டது?!

புதுச்சேரியில் வாகன சோதனையின்போது, ரூ.3.53 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் படை பறிமுதல் செய்தது.

புதுச்சேரி கோரிமேடு எல்லைப்பகுதியில் தேர்தல் துறையின் சோதனை சாவடி தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்னை கிண்டியில் இருந்து புதுச்சேரிக்கு வந்த BVC LOGISTICS நிறுவனத்தின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்  ஏராளமான தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை சாவடியில் ஆய்வு செய்த போது ரூ.50,56,144 மதிப்பிலான தங்கம் என்றும் 1 கிலோ 141 கிராம் தங்க நகைகள் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து தேர்தல் அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை தட்டாஞ்சாவடியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.பின்னர் அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை சோதனை செய்ததில் கூடுதலாக தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. ரூ.3.53 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இந்த நகைகள் புதுச்சேரியில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு கொண்டுசெல்ல இருந்ததாகவும், நகை எடுத்து சென்ற வாகனத்தின் எண் மாறியதால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. உரிய ஆவணங்கள் சரிபார்த்த பின்பும் இரவு நேரமாகி விட்டதால் தங்க நகைகள் அரசு கருவூலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow