சென்னையில் இன்றும் 8 விமானங்கள் ரத்து - இதுதான் காரணமா?

நாளை வெள்ளிக்கிழமை முதல், சென்னை விமான நிலையத்தில், வழக்கமான பயணிகளுடன், வழக்கமான விமான சேவைகள் இயங்கும்.

Oct 17, 2024 - 17:42
சென்னையில் இன்றும் 8 விமானங்கள் ரத்து - இதுதான் காரணமா?

இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வெளியிட்ட கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்றும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து, 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதோடு, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதை அடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை, அதோடு ரெட் அலர்ட் விடுத்திருந்தது.இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில், விமான பயணிகள் பலர் பாதுகாப்புக் கருதி, தங்கள் பயணங்களை ரத்து செய்து விட்டனர். இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் இல்லாமல் கடந்த 3 தினங்களாக, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் நேற்று இரவு ரெட் அலர்ட் மற்றும் கனமழை எச்சரிக்கையும் திரும்ப பெறப்பட்டது. 

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில், இன்று வழக்கம்போல் விமான சேவைகள் இயங்கத் தொடங்கி விட்டன. ஆனாலும் பயணிகள் பலர் இன்னும் அச்சம் நீங்கி, விமான பயணம் மேற்கொள்ள விமான நிலையம் வராததால், இன்று வியாழக்கிழமையும் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இன்று 4 புறப்பாடு விமானங்களும், 4 வருகை விமானங்களும், மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இன்று அதிகாலை 4.40 மணிக்கு, சென்னையில் இருந்து அந்தமான் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.அதைப்போல் காலை 5.50 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 9.40 மணிக்கு, சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 2.15 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்த குறைந்த அளவு பயணிகள், அதற்குப் பின்பு அந்தந்த நகரங்களுக்கு செல்லும் வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

அதைப்போல் இன்று காலை 9.10 மணிக்கு, மதுரையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 9.30 மணிக்கு, அந்தமானில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 9.10 மணிக்கு, பகல் 12.10 மணிக்கு, திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 1:25 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கனமழை எச்சரிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம், 17ஆம் தேதி இன்று வியாழக்கிழமை வரை, ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால் பயணிகள் பலர் தங்களுடைய பயணத் திட்டத்தை, இன்று வரையில் ரத்து செய்துவிட்டனர். இதனால் தான் போதிய பயணிகள் இல்லாமல், இன்று சென்னை விமான நிலையத்தில், புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. நாளை வெள்ளிக்கிழமை முதல், சென்னை விமான நிலையத்தில், வழக்கமான பயணிகளுடன், வழக்கமான விமான சேவைகள் இயங்கும். இவ்வாறு கூறுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow