2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்...குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு..
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மிதுன் சக்ரவர்த்தி, ரோஹன் போபண்ணா, பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.
நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகள் அல்லது செயல்பாடுகளின் துறைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டு அறிவிக்கப்பட்டவர்களுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (ஏப்ரல் 22) நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சுலப் இன்டர்நேஷனல் பிந்தேஷ்வர் பதக், பரதநாட்டிய நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பாடகி உஷா உதுப், உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநர் ராம் நாயக், தொழிலதிபர் சீதாராம் ஜிண்டால் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோஹியாவுக்கு பத்ம ஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 132 பத்ம விருதுகளில் பாதி பேருக்கு நேற்று விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?