லவ் பண்றீங்கல்ல தாலி கட்டிக்கோங்க.. ஷாக் ஆன லவ்வர்ஸ்.. இமகவினரை அள்ளிச் சென்ற போலீஸ்..!

Feb 14, 2024 - 16:05
லவ் பண்றீங்கல்ல தாலி கட்டிக்கோங்க.. ஷாக் ஆன லவ்வர்ஸ்.. இமகவினரை அள்ளிச் சென்ற போலீஸ்..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தஞ்சையில் உள்ள சுற்றுலாத் தளங்கள், கோயில்கள் என பல இடங்களுக்கும் காதலர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் இந்து மக்கள் கட்சியினரின் செயலால் காதலர்கள் அலறியடித்து ஓட, அவர்களை கைது செய்ய காவலர்களும் களமிறங்கினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் திருமணம் செய்து வைக்க தாலிக் கயிறு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோயில் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தினர்.

மேலும் கோயிலுக்கு வந்த காதல் ஜோடிகளையும் விசாரித்து திருப்பி அனுப்பினர். இந்நிலையில், பந்தக்கால், தாலி உள்ளிட்ட சீர் வரிசைப் பொருட்களுடன் கோயிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். கோயில் வாயிலைப் பூட்டி அவர்களை கோயிலுக்குள் நுழையவிடமால் நிறுத்தி சீர்வரிசைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சியினர், கோயில் வாயிலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல்நிலை நிலவியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow