உள்துறை செயலாளர் நீக்கம், அடுத்தடுத்து அதிகாரிகள் மாற்றம்: திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் தேர்தல் ஆணையம்
தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை கமிஷனரை தொடர்ந்து, உள்துறை தீரஜ்குமாரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் திமுகவுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அந்த வகையில், 3 ஆண்டுகளுக்கு ஒரே பதவியில் இருப்பவர்கள் மற்றும் புகாருக்குள்ளான, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய்குமார் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை காவல் ஆணையர் அருணுக்கு பதிலாக அபின் தினேஷ் மோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அருண் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இன்றைய தினம் தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக மணிவாசனை புதிய உள்துறை செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்து மாலை 5 மணிக்குள் பதவி ஏற்க உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் மாற்றத்திற்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதிகாரிகள் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்பி டிஆர் பாலுவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். உள்துறை செயலாளர் மாற்றி திமுகவுக்கு மற்றொரு ஷாக்கை தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கிறது.
What's Your Reaction?

