செம்மண் கடத்தப்படுவது தொடர்பாக நேரில் ஆய்வு - அரசு தகவல்
ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை அகற்றப்பட்டு, நான்கு வாரங்களில் பழைய நிலைக்கு மீட்கப்படும்
சென்னை தாம்பரத்தில் உள்ள பச்சை மலையை அழித்து சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தாசில்தாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
சென்னை தாம்பரத்தை ஒட்டிய கடப்பேரி கிராமத்தில் உள்ள பச்சமலையில் சிவன் கோவில் அமைந்துள்ளது.இந்திய தொல்லியல் துறையால் புராதன பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்த பகுதியில் சட்டவிரோதமாக ஜே.சி.பி. இயந்திரங்களை பயன்படுத்தி செம்மண் எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாகவும், மரங்கள் வெட்டப்படுவதாகவும் கூறி, குரோம்பேட்டையைச்சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பச்சமலையில் இருந்து செம்மண் கடத்தப்படுவது குறித்து தொல்லியல் துறைக்கும், தமிழக அரசுக்கும் புகார் மனு அனுப்பியதாகவும், அதன்படி அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்திய போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சைமலை பகுதியை அழித்து செம்மண் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில், தொல்லியல் துறையின் கடிதத்தைப் பெற்ற மாவட்ட ஆட்சியர், சம்பவ இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி தாசில்தாரருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை அகற்றப்பட்டு, நான்கு வாரங்களில் பழைய நிலைக்கு மீட்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
What's Your Reaction?