மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் மக்கள் தெருக்கோடிக்குத்தான் செல்ல வேண்டும் - சீமான் ஆவேசம்
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் மும்மடங்கு உயர்ந்துள்ளது எனக்கூறி மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் மக்கள் தெருக்கோடிக்குத்தான் செல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பி.காளியம்மாளை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்தும் பிரதமராக இருந்துள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக 39 இடங்களை கைப்பற்றியது. அப்போதும் மோடிதான் பிரதமரானார். அவர் நம் மக்களுக்காக ஒன்றும் செய்ததில்லை. நமது உரிமையை பறித்துக் கொள்பவர்களுக்கும், உரிமையை தர மறுப்பவர்களுக்கும் எதற்கு வாக்களிக்க வேண்டும்?" என கேள்வியெழுப்பினார்.
மேலும், "காவிரி நீர் கிடைக்காமல் போனதற்கு காங்கிரஸ் மற்றும் திமுகவே காரணம். முல்லை பெரியாரில் இருந்து தண்ணீரை திமுக அரசால் பெற்றுத்தர முடியவில்லை. ரூ.56 லட்சம் கோடி இந்தியாவின் கடனாக இருந்த நிலையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் ரூ.156 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்கள் தெருக்கோடிக்குத்தான் செல்ல வேண்டும்" எனவும் கடுமையாக விமர்சித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்துப் பேசிய சீமான். "இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிதான் என உலக வங்கி சொல்கிறது. எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவுசெய்து மோடிக்கு வாக்களிக்காதீர்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறது பாஜக அரசு. ஒரே தேர்தல் நடத்தினால் நாட்டில் வறுமை ஒழிந்திடுமா?. பல நாடுகளின் ஒன்றியம் தான் இந்தியா. ஒரே நாடு என்றால் தண்ணீர் ஏன் நம் மக்களுக்கு கிடைக்கவில்லை?" என ஆவேசமாகப் பேசி பரப்புரை செய்தார்.
What's Your Reaction?