காஞ்சிபுரத்தில் பட்டதாரி இளைஞர் வெட்டிக்கொலை

கொலையுண்ட ஆனந்தனின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Jan 8, 2024 - 13:03
Jan 8, 2024 - 14:31
காஞ்சிபுரத்தில் பட்டதாரி இளைஞர் வெட்டிக்கொலை

காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைதரகராக இருந்து வந்த பட்டதாரி இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 31). இவர் காரப்பேட்டை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் LLR, லைசன்ஸ் பெற்று தருதல், வாகனங்களுக்கான FC புதுப்பித்தல் போன்ற பணிகளை இடைதரகராக மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவு ஆனந்தன் தனது வீட்டில் இருந்த நிலையில் அவரது தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்திருக்கிறது.இதனையெடுத்து தான் வெளியில் சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்ற நிலையில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சாலையின் காரப்பேட்டை பகுதியில் மூடியிருந்த டிபன் கடையில் தனது நண்பர்களுடன் அமர்ந்து அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஆனந்தன் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு அங்கு சடலமாக இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலையுண்ட ஆனந்தனின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் நடந்தேறிய இடத்தில் டிபன் கடையின் மேஜையின் மீது மது பாட்டில்களும் சிகரெட் வஸ்துகளும் இருந்த நிலையில், ஆனந்தன் தனது நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டு இந்த கொலை நடந்திருக்க கூடுமா? மது அருந்திய போது ஏதேனும் தகராறு ஏற்பட்டு நண்பர்கள் தான் அவரை கொலை செய்தனரா ?அல்லது முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்க கூடுமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவரை போலீசார் விசாரணை மேற்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனந்தனின் கொலை சம்பவத்தால் ஒருபுறம் போலீஸாரும், மற்றொருபுறம் காரப்பேட்டை பகுதி மக்கள் அங்கு குவிந்தால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow