மும்பையை வீழ்த்திய கொல்கத்தா… ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அபாரம்…
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்த நிலையில் போட்டி தடைபட்டது. இதனால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியதால் ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டாஸை வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபில் சால்ட் 6 ரன்களிலும், சுனைல் நரைன் ரன்கள் எதுவும் எடுக்காமலும் ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் களமிறங்கி ரன்களை உயர்த்தினார். 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 42 ரன்கள் அடித்து விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்கள், நிதிஷ் ரனா 33 ரன்கள், ரசூல் 24 ரன்கள், ரிங்கு சிங் 20 ரன்கள், ரமன்தீப் சிங் 17 ரன்கள் அடித்தனர். 16 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா மற்றும் பியூல் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 158 ரன்கள் இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷான் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்தில் அதிரடி காட்டிய இஷான் கிஷான், 40 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரோகித் ஷர்மா 19 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய மும்பை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
16 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. மேலும், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கொல்கத்தா அணி, 18 புள்ளிகளுடன் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
What's Your Reaction?