உலக தரத்தில் மாறப்போகும் ரயில் நிலையங்கள்- பிப்.26-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
ரயில் நிலையங்கள் வாரியாக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உலக தரத்தில் 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகளை பிப்ரவரி 26-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார்.
நாட்டில் உள்ள முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களை மத்திய அரசு 'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையத்தைத் தூய்மையாகப் பராமரிப்பது, காத்திருப்பு அறை, இலவச வைஃபை வசதி, மின்தூக்கி படிக்கட்டுகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளைக் கடந்த ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் 2-ம் கட்டமாக 554 ரயில் நிலையங்கள் மேம்படுத்துவதற்கான பணிகளை பிப்ரவரி 26-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இதில், சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்களும், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்களும், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், ஓசூர் மற்றும் தருமபுரி ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரயில் நிலையங்கள் வாரியாக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?