தென்காசி: தொடரும் காட்டுப் பன்றி வேட்டை

வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை சும்மா விடமாட்டோம்

 தென்காசி: தொடரும் காட்டுப் பன்றி வேட்டை

தென்காசி பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சிவகிரி மேற்குத் தொடர்ச்சி மலையில் மான், மிளா, யானை, காட்டுப் பன்றி, கரடி உள்ளிட்ட எண்ணற்ற வனவிலங்குகள் உள்ளன. அவை அனைத்தும் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்தாலும் காட்டுப் பன்றிகள் மட்டும் மலையோர சமவெளிப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. 

சில சமயம் அவை குடிநீர் தேடி ஊருக்குள்ளும் வருகின்றன. இந்த நிலையில் சிவகிரி வனப்பகுதிக்குள் சிலர் வேட்டை நாய் உதவியுடன் துப்பாக்கியால் சுட்டு வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன உயிரின காப்பாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

குறிப்பாக கருப்பசாமி கோயில் ஃபீட்டில் உள்ள அரிவாள் தீட்டி சரகத்தில்தான் வேட்டைக் கும்பல் சுற்றுவதாக தகவல் வரவே, அவர் உடனடியாக ரேஞ்சர் மவுனிகா தலைமையில் வன ஊழியர்கள் கொண்ட ஸ்பெஷல் டீமை அங்கு அனுப்பினார்.இந்த டீம் கருப்பசாமி கோயில் பகுதியை தீவிரமாக கண்காணித்தது. அப்போது இவர்களைப் பார்த்ததும் சிலர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை வன ஊழியர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.

அவர்களின் பைகளை சோதனையிட்டபோது அதில் காட்டுப்பன்றி இறைச்சி, நாட்டு துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு வேட்டை நாய்களையும் வனத்துறை பறிமுதல் செய்தது.

இது தொடர்பாய் கடையநல்லூர் பக்கம் இடைகாலைச்சேர்ந்த ராஜதுரை, ராஜன், மாரிமுக்த்து, முத்துக்குமார், சுரேஷ், விஜய், பால்குமார் ஆகிய ஏழு பேர்களை கைது செய்தது வனத்துறை.இதுகுறித்து ரேஞ்சர் மவுனிகா கூறுகையில், “சிவகிரி பகுதியில் நடைபெற்றிருக்கும் இந்த காட்டுப்பன்றி வேட்டையைத் தொடர்ந்து அப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை சும்மா விடமாட்டோம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow