3 உயிர்களை காவு வாங்கிய கல்குவாரி வெடி விபத்து.. உடல்கள் ஒப்படைப்பு.. நிவாரணம் கொடுத்த குவாரி நிர்வாகம்
விருதுநகரில் நேற்று நிகழ்ந்த கல்குவாரி வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் குவாரி உரிமையாளர்கள் இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான பங்குதாரர்களை இருவரை தேடி வருகின்றனர். குவாரி நிர்வாகம் சார்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆர்எஸ்ஆர் என்ற தனியார் கல்குவாரியில் நேற்று (மே 1) லாரியிலிருந்து குடோனுக்கு வெடிபொருள்கள் மாற்றிக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்ததுடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குவாரியில் பணியாற்றிய மதுரையை சேர்ந்த கந்தசாமி, கோவில்பட்டியை சேர்ந்த பெரியதுரை, குருசாமி ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஆவியூர் போலீசார் மற்றும் மாவட்ட எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், அருப்புக்கோட்டை கோட்டாச்சியர் வள்ளிக்கண்ணு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
வெடி விபத்து நிகழ்ந்த கல்குவாரியில் வேறு ஏதேனும் வெடி பொருட்கள் உள்ளதா என மதுரை மாநகர் வெடிபொருள் தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கல்குவாரி சேதுராமன் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் பெயரில் லைசென்ஸ் பெற்று இயங்கி வருவதாகவும் இங்கிருந்துதான் சுற்றுவட்டார கல்குவாரிகளுக்கு வெடி மருந்து கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்குவாரி உரிமையாளர்களான சேதுராமன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்த ஆவியூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கல்குவாரியின் பங்குதாரர்களான ராமசாமி மற்றும் ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று (மே 2) அதிகாலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கல்குவாரி நிர்வாகம் சார்பில் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது.
What's Your Reaction?