"தமிழ்நாட்டில் திமுக ஒரு அரக்கன்.. திமுகவை துடைத்தெரிய வேண்டும்!" - பிரதமர் மோடி விளாசல்
திமுக - காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டு மக்களுக்கு நஷ்டம்தான் என பிரதமர் மோடி விமர்சனம்
                                தமிழ்நாட்டில் திமுக ஒரு அரக்கனாக உள்ளதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டை துண்டாக்க நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டதாகவும் அதையே தமிழ்நாட்டு மக்கள் பின்பற்றுவர் எனவும் கூறினார். திமுக-காங்கிரஸ் I.N.D.I.A கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது எனவும், அவர்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார். அவர்களின் கொள்கையே ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான் எனவும் அவர் விமர்சித்தார்.
ஒருபக்கம் என்னற்ற மக்கள் நலத்திட்டங்களை பாஜக வழங்குவதாகவும், அந்த பக்கம் இந்தியா கூட்டணியின் கோடிக்கணக்கான ஊழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆப்டிகல் ஃபைபர், 5ஜி உள்ளிட்டவற்றை பாஜக மக்களுக்கு கொடுக்கிறது என்றும், ஆனால் I.N.D.I.A கூட்டணியில் லட்சக்கணக்கான, கோடிகளில் நடைபெற்ற ஊழல்தான் இருக்கிறது எனவும் அவர் கூறினார்.
இங்கிருக்கும் பழைமையான கோயில்களுக்குச் சென்று பூஜை செய்ததாக கூறிய பிரதமர் மோடி, திமுக அரசு அயோத்தில் நடந்த கும்பாபிஷேகத்தைக் கூட பார்க்க விருப்பமில்லை என பிரதமர் சாடினார். நமது கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தின் மீதும் திமுக வெறுப்பை கக்கிக் கொண்டிருக்கிறது என்றும், தமிழ்நாட்டின் அடையாளம், பாரம்பரியத்தை காக்க பாஜக எப்போதும் முன்னணியில் நிற்கும் என்றும் அவர் கூறினார். தமிழர்களின் பெருமையை யாரும் புறக்கணிக்க தன்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டு மக்களுக்கு நஷ்டம்தான் எனவும், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது எனவும் அவர் கூறினார். அந்தத் தடையை நீக்கியது பாஜகதான் என தெரிவித்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் திமுக ஒரு அரக்கனாக உள்ளதாக விமர்சித்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் தமிழ் மக்களின் உயிரோடு விளையாடும் குற்றத்தை செய்தார்கள் என்றும், இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டது பாஜக தான் எனவும் அவர் கூறினார். திமுக, காங்கிரஸ் கட்சிக்கு பெண்களை அவமதிக்கவும் ஏமாற்றவும் மட்டுமே தெரியும் எனவும், பாஜக மட்டுமே பெண்களை மதிக்கும் கட்சி எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            