பஞ்சாயத்து தலைவர் தேர்தல்:மறு வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவு!
மீதமுள்ள வாக்குகளையும் எண்ணும் போதே உண்மையான வெற்றியாளரை நிர்ணயிக்க முடியும் என்பதால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு நீதிபதி உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காயாமொழி பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது.
தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு முரளிமனோகர், சோபா, சரஸ்வதி, முகமது அன்வர் உசேன், பொன்ரத்தின செல்வன், ராஜேஸ்வரன், குமரகுருபர ஆதித்தன், இசக்கிமுத்து ஆகிய 8 பேர் போட்டியிட்டனர். அந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 2020ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி நடந்தது. அதில் அதிகபட்சமாக ராஜேஸ்வரன் 1071 வாக்குகள் பெற்றார்.அடுத்தபடியாக முரளிமனோகர் 1070 வாக்குகள் பெற்றார். இதனால் 1 வாக்கு வித்தியாசத்தில் ராஜேஸ்வரன் வென்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். தோல்வி அடைந்த அதிருப்தியில் இருந்த முரளிமனோகர் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், கடந்த 4ம் தேதி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் தற்போது காயாமொழி பஞ்சாயத்து தலைவராக உள்ள ராஜேஸ்வரன் வெற்றி பெற்றதாக அறிவித்த ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மொத்தம் பதிவான 3 ஆயிரத்து 90 வாக்குகளை உத்தரவிட்ட நாளிலிருந்து
ஒரு மாத காலத்திற்குள் மறு வாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதாவது ஏற்கனவே நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது 3 ஆயிரத்து 87 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளது. ஆகவே மீதமுள்ள வாக்குகளையும் எண்ணும் போதே உண்மையான வெற்றியாளரை நிர்ணயிக்க முடியும் என்பதால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் மனுதாரர் முரளிமனோகர் தரப்பில் வக்கீல் ஆறுமுகராம் ஆஜராகி வாதாடினார்.
What's Your Reaction?