பாலமேடு ஜல்லிக்கட்டில் பிரபாகரன் முதலிடம்-கார் பரிசளிப்பு
6 பேர் படுகாயங்களுடன் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கிய பிரபாகரன் என்பவருக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த காளைக்கு சிறந்த காளைக்காக காரும் பரிசளிக்கப்பட்டது.
உலக புகழ்ப்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி மாலை 5 மணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகளின் முடிவில் 14 காளைகளை அடக்கிய பொதும்பு பிரபாகரன் என்பவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
அதேப்போல் புதுக்கோட்டை ராக்கெட் சின்ன கருப்பு காளைக்கு கார் மற்றும் கன்றுடன் கூடிய பசு பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் சின்னப்பட்டி தமிழரசனுக்கு பைக்கும், சிறந்த காளை பிரிவில் 2வது இடம் பிடித்த தேனி அமர்நாத்தின் காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டு பசு பரிசு வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 45க்கும் மேற்பட்ட வீரர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காயம் அடைந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்ட காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
மேலும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் இடத்தில் காளைகளின் உரிமையாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான மக்கள் மற்றும் வெளிநாட்டினர் வந்திருந்தனர். மேலும் அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மதுரை ஆட்சியர் மற்றும் நடிகர்கள் சூரி, அபி சரவணன் ஆகியோர் கண்டு ரசித்தனர்.இதில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?