பட்டா மாற்றம்: ரூ.5 ஆயிரம் லஞ்சம்- சர்வேயர்,இடைத்தரகர் கைது
ரசாயன பவுடர் தடவப்பட்ட பணத்தை எடுத்துச்சென்ற வைத்தியநாதன் நேற்று இரவு மகேந்திரனை தொடர்பு கொண்டு பேசினார்.
தஞ்சையில் பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் உடந்தையாக இருந்த இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை நீலகிரி தோட்டம் கபிலன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா.சிங்கப்பூரில் வசித்து வரும் இவருக்கு தஞ்சையில் சொந்தமான இடம் கூட்டு பட்டாவாக இருந்ததால் தனது பெயருக்கு தனிப்பட்டாவாக மாற்றம் செய்ய முடிவு செய்தார்.
இதற்காக தனது உறவினரான வைத்தியநாதன் (65) என்பவர் மூலம் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தார்.இந்த இடத்தை அளவீடு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய அந்த விண்ணப்பம் மீது விசாரணை செய்வதற்காக தஞ்சை வட்ட வருவாய்த்துறை சர்வேயருக்கு சென்றது.தனது விண்ணப்பம் சர்வேயரான தஞ்சை அருளானந்த நகர் ரமேஷ் (32) என்பவரிடம் இருப்பதை அறிந்த வைத்தியநாதன், அந்த சர்வேயரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும்.இனிமேல் தனது செல்போன் நம்பரில் பேச வேண்டாம் எனவும் கூறி பாபநாசம் தாலுக்கா புளியங்குடி கிராமத்தை சேர்ந்த மகேந்திரனை (36) தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவரது செல்போன் நம்பரையும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத வைத்தியநாதன், இது குறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட பணத்தை எடுத்துச்சென்ற வைத்தியநாதன் நேற்று இரவு மகேந்திரனை தொடர்பு கொண்டு பேசினார்.
அதற்கு மகேந்திரன் தான் தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகை அருகே இருப்பதாக கூறியதை தொடர்ந்து அங்கு வந்த வைத்தியநாதன் தன்னிடம் இருந்த ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.5 ஆயிரத்தை வழங்கினார்.அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர், ரமேஷை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் வாங்கிய தகவலை தெரிவித்தார்.
இவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர்.இதையடுத்து வைத்தியநாதன் ரமேஷை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மகேந்திரன் தஞ்சை அரண்மனை அருகே காமராஜ் மார்க்கெட் பகுதியில் இருந்த ரமேஷிடம் வைத்தியநாதன் அழைத்துச்சென்றார்.
அப்போது வைத்தியநாதனிடம் வாங்கிய லஞ்சப் பணத்தை மகேந்திரன் ரமேஷிடம் கொடுத்த போது தஞ்சை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சரவணன் மற்றும் போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து சர்வேயர் ரமேசையும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் மகேந்திரனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?