120 அடி பிரம்மாண்ட தேர்.. தலைகீழாக கவிந்து விபத்து.. சிதறி ஓடிய பக்தர்கள்.. கர்நாடகாவில் பரபரப்பு !
தேர் கவிழ்ந்தாலும் திருவிழா எந்த தடையும் இன்றி நடக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடந்த கோயில் திருவிழாவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்த 120 அடி தேர் சரிந்து விபத்துக்குள்ளான பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களுரூ புறநகர் பகுதியான ஹூஸ்கூர் கிராமத்தில் மத்துரம்மா கோயிலில் ஒவ்வொரு வருடமும் கோலாகல திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதில் பிரம்மாண்ட தேரை வடம்பிடித்து இழுத்து செல்வது சிறப்பான நிகழ்வாகும். இந்நிலையில், இந்தாண்டும் வழக்கமான உற்சாகத்துடன் திருவிழா தொடங்கியது. இதன் 2ஆம் நாளில் சிறப்பு தேர் திருவிழா நடைபெற்றது.
இதில் 120 அடி பிரம்மாண்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பாரதவிதமாக ஒருபக்கமாக சாய்ந்து மொத்த தேரும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் சாய்வதை கவனித்த பக்தர்கள் சுதாரித்துக்கொண்டு ஓட்டம் பிடித்ததால் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதைதொடர்ந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் சரிந்து கீழே விழுந்த தேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர் கவிழ்ந்தாலும் திருவிழா எந்த தடையும் இன்றி நடக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
What's Your Reaction?