கோடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. பங்களாவை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி..
தடயங்களை அழிக்கக் கூடாது, மாற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன் சோதனை நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது
கோடநாடு கொலை கொள்ளை வழக்கை CBCID போலீசார் விசாரித்து வரும் நிலையில், பங்களாவை ஆய்வு செய்ய உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ளது. இந்த பங்களாவில், கடந்த 2017ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. அப்போது இரவு காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சேலத்தைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட 10 பேர் ஈடுபட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் வாளையாா் மனோஜ் மட்டும் ஆஜரானார்.அப்போது குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரான விஜயன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அதில், சம்பவம் நடந்த இடத்தை தாங்கள் பார்வையிட வேண்டும் எனக்கூறி அனுமதி கேட்டிருந்தார்.இதுகுறித்து பதில் அளிக்குமாறு கூறி, நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நடந்த இடத்தை பார்வையிட அனுமதி கோரி குற்றஞ்சாட்டப்பட்டோரின் மனுவுக்குப் பதில் அளிக்கத் தமிழ்நாடு அரசு கூடுதல் கால அவகாசம் கோரிய நிலையில், அதற்கு நீதிபதி சம்மதித்தார்.
மேலும், தமிழக அரசு சார்பில் மற்றொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் விசாரணை அதிகாரிகள் கோடநாடு கொலை, கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்ய அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, சிபிசிஐடி போலீஸ், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் கொண்ட குழு கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி அளித்தனர். தடயங்களை அழிக்கக் கூடாது, மாற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன் சோதனை நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், கோடநாடு பங்காளாவில் நடத்தப்படும் சோதனையை முழுமையாக வீடியோ எடுத்து சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.
What's Your Reaction?