சாதிவாரி கணக்கெடுப்பு... கேள்வி எழுப்பிய ஜி.கே மணி... முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்!
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி முதல் நடந்து வருகிறது. 4வது நாளாக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதால் கூட்டத்தொடரில் அதிமுக பங்கேற்கவில்லை.
சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விக்கு, அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருந்தனர்.
அப்போது பாமக உறுப்பினர் ஜி.கே மணி, 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்' என்று கோரிக்கை எழுப்பினார். இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
இப்போது நீங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த கூட்டணியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும்.
ஏற்கெனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை உறுப்பினர் ஜி.கே மணிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்,
ஜி.கே மணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உரிய விளக்கம் அளித்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும் என்று சொன்னால் சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒன்றிய அரசால் விரைந்து நடத்தப்பட வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கோரி இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வர உள்ளோம். அதற்கு பாமக உறுப்பினர் ஜி.கே மணி ஆதரவு அளிக்க வேண்டும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாக கூறி பாமக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே மணி, ''சாதி வாரி கணக்கெடுப்பும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதும் தனித்தனி பிரச்சனையாகும்.
ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு தமிழ்நாடு அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆகவே ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கும் அதிகாரம் உள்ளது'' என்று தெரிவித்தார்.
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?