பிளாஸ்டிக் பொருள் மீதான தடை - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மூன்று துறைகளின் செயலாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அமர்வில் இன்று (நவ 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தற்போதைய நிலை என்ன? அந்த குழு எத்தனை முறை கூடியுள்ளது எனவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பிளாஸ்டிக்கை தடை செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டு, 2018ம் ஆண்டு ப்ளாஸ்டிக் தடை செய்யப்பட்டதால், 2018ம் ஆண்டுக்கு பிறகு அந்த குழு கூடவில்லை என்றார்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் தாரளமாக பிளாஸ்டிக் கிடைப்பதாக கூறிய நீதிபதிகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் நுழைவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.
இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் தமிழக சுற்றுச்சூழல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மற்றும் தொழில்துறை ஆகிய மூன்று துறைகளின் செயலாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் டிசம்பர் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
அப்போது ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்,இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.அதற்கு பதிலளித்த நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காகவே ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக கூறினர்.
What's Your Reaction?