கோயில் நிலம் ஆக்கிரமிப்பு? தட்டிக் கேட்டவருக்கு அர்ச்சனை..
திருப்பத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளது குறித்து தட்டிக்கேட்டவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தோப்பளகுண்டா பகுதியில் 100 ஆண்டு பழமையான நொண்டி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சில நாட்களில் திருவிழா நடைபெற உள்ளது. இதை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக ஊர் பொதுமக்கள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது சின்ராஜ் என்பவர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாகவும், அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இதே பகுதியை சேர்ந்த கவுன்சிலரான சந்தோஷ் என்பவர் கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
இதையடுத்து ஊர் பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். கூட்டத்தில் சின்ராஜ் தாக்கியதால் சந்தோஷ் காயமடைந்ததாக, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கோயில் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?