அரசு ஊழியர்களே திமுக ஆட்சி குறித்து இப்படி நினைக்கிறார்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி விமர்சனம்
மூன்றரை ஆண்டுகள் திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை
அதிமுகவுடன் இப்போது நல்ல கட்சிகள் அணுகி பேசிக்கொண்டிருக்கிறார்கள், நல்ல கூட்டணி இபிஎஸ் தலைமையில் அமையும் என கரூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தாந்தோணி மேற்கு ஒன்றிய செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “இப்போது நல்ல கட்சிகள் எடப்பாடி பழனிசாமியை அணுகி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் அவர் கூட தான் இருக்கிறேன். உங்களுக்கு தெரியும், நல்ல கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும். நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த இபிஎஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த மூன்றரை ஆண்டுகள் திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. இந்த ஆட்சியில் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த ஆட்சி போக வேண்டும் என நினைக்கிறார்கள், எப்போதும் திமுகவிற்கு ஓட்டுப் போடுகின்ற அரசு ஊழியர்கள் இந்த ஆட்சி வீட்டுக்குப் போக வேண்டும் என நினைக்கிறார்கள்” என தெரிவித்தார்.
What's Your Reaction?