திருவாரூர் பள்ளிவாசலில் சர்க்கரைப் பொங்கல் திருவிழா !

நூற்றுக்கணக்கான பாத்திரங்களில் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கலை செய்து வைத்து சிறப்பு துவா ஓதி வழிபட்டனர்.

Nov 24, 2023 - 12:32
Nov 24, 2023 - 15:38
திருவாரூர் பள்ளிவாசலில்   சர்க்கரைப் பொங்கல் திருவிழா !

திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வரும் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் சர்க்கரை பொங்கலை வைத்து பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது.இப்பள்ளிவாசலில் செய்யது மசூம் சாஹிப் ஒலியுல்லா என்ற மகான் தங்கி பல்வேறு அற்புதங்களை நடத்தியதோடு, இஸ்லாமியர்களுக்கு மட்டுமன்றி  அனைத்து மதத்தினருக்கும் ஆசி வழங்கி அருள்பாலித்துள்ளார். 

இவர் தங்கி அருள்பாலித்து வந்த முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நினைவிடமாக அமைத்து இஸ்லாமியர்கள் வழிபட்டு வருவதோடு, மகான் செய்யது மசூம் சாஹிப் ஒலியுல்லா அடக்கமான நாளை பாச்சோறு திருவிழாவாக அனுஷ்டித்து வருகின்றனர். 

பாச்சோறு திருவிழா என்பது 5 படி வெள்ளம், 5 கிலோ பச்சரிசி, 5 தேங்காய் என்ற எண்ணிக்கையில் சர்க்கரை பொங்கலை தயார் செய்து அதனை மகான் அடக்கமான நாளில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்திற்கு கொண்டு வந்து சிறப்பு துவா செய்து, பின்னர் அதனை அனைவருக்கும் பிரதாசமாக வழங்குவது இவ்விழாவின் சிறப்பு அம்சம்.

இதன்படி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மகான் செய்து மசூம் சாஹிப் ஒலியுல்லா அடக்கமான நாளான இன்று அவரது நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களில் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கலை செய்து வைத்து சிறப்பு துவா ஓதி வழிபட்டனர்.பின்னர் மகான் நினைவிடத்தில் ஒவ்வொருவரும் தங்களது திருகரங்களால் சந்தனம் பூசி வழிபட்டனர்.

இம்மகானிடம் தாங்கள் நினைத்த காரியம் வெற்றியடைய வேண்டி பிராத்தனை மேற்கொண்டவர்கள் நேர்த்திகடன் செலுத்தும் விதமாக பாச்சோறு பெருநாளில் கலந்துகொண்டு நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow