தேனியில் களமிறங்கும் இரு பெரும் புள்ளிகள்...
2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள சூழலில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எந்தெந்த தொகுதி? யார் வேட்பாளர் என்று அரசல்புரசலாக பேச்சுகள் அடிபட்டு வரும் சூழலில், தேனி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தமட்டில் தற்போது எம்.பியாக உள்ள ஓ.ரவீந்திரநாத் குமார் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மிகக்குறைவு. அதுபோக மீண்டும் அத்தொகுதியைக் காங்கிரஸிற்கு திமுக வழங்காது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே.
பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தவை தொகுதி மறுசீரமைப்பில் 2009 முதல் தேனி நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றப்பட்டது. 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளிடக்கியது அதில் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கும். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் ஆண்டிபட்டியில் எம்.எல்.ஏ -வாக தேர்வாகியிருந்தது, பெரியகுளத்தில் டி.டி.வி தினகரன் மக்களவை உறுப்பினராக இருந்தது அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் என தேனி சுற்றுவட்டாரத்தில் அதிமுக வலுவடைந்ததற்கு முக்கிய காரணம் 2016 சட்டமன்ற தேர்தலில் கூட தேனி மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. தற்போது திமுக தேனி மாவட்டச் செயலாளராக உள்ள தங்க.தமிழ்செல்வன் கூட அதிமுகவிலிருந்து வந்தவரே.
திமுக:
திமுக வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன் தான் வேட்பாளர் என்பது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல். பொதுவாகத் தென் மாவட்டங்களில் குறிப்பாக ஆண்டிப்பட்டி, தேனி, உசிலம்பட்டி, போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சமுதாய வாக்கு வங்கிகள் அதிகமாக உள்ளது. ஆளுங்கட்சியான திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் எந்த ஒரு அரசு பதவிகளிலும் இல்லாதது ஒரு சிலரே அந்த வகையில் தேனி திமுக மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்செல்வனும் எந்த பதவிலும் இல்லை மேலும் முன்னாள் மாவட்டச் செயலாளர் எல்.மூக்கையாவை தவிர திமுகவில் பிரபலங்கள் என்று யாருமில்லை. ஏற்கனவே ஜெயலலிதாவிற்காகத் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது மற்றும் 2019 தேர்தலில் அமமுக சார்பில் நின்று 12% வாக்குகளைப் பெற்றிருந்தார். மேலும் தொகுதிக்கு நல்ல பரிட்சையமான நபரே. அதேசமயம் அதிமுக தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளரும் சற்று பலம் பொருந்தியவரே.
அதிமுக:
2016 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ வாக செயல்பட்டவர். பின், அமமுக தலைமை கழக செயலாளராக இருந்த மகேந்திரன் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் உசிலம்பட்டியில் அமமுக சார்பில் போட்டியிட்டு 26% வாக்குகளைப் பெற்றார். மேலும் பாஜகவிலிருந்து தற்போது அதிமுகவில் இணைந்த சி.டி.நிர்மல்குமாரும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் பக்கபலமாக இருப்பது மேலும் அவருக்கு ப்ளஸ்.
ஆளுங்கட்சியான திமுகவிற்கும் எதிர்க்கட்சியான அதிமுகவிற்குப்பயங்கர இழுபறி ஏற்படும். இருவரின் வெற்றி வித்தியாசமும் சொர்ப்ப வாக்குகளே இருக்கும் ஏனென்றால் இருவரும் பலம்வாய்ந்த வேட்பாளர்கள். அதே சமயம் ஓபிஎஸ் அணி, அமமுக வாக்குகளும் இத்தொகுதியில் கணிசமாக உள்ளது.
- மா.நிருபன் சக்கரவர்த்தி
What's Your Reaction?