மணிப்பூரில் மீண்டும் வன்முறை:2 பேர் பலி-25க்கும் மேற்பட்டோர் காயம்
குக்கி இன மக்கள் மீது போலீசார் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மணிப்பூரில் தலைமைக் காவலருக்கு ஆதரவான போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலம், சர்சந்த்பூர் மாவட்டத்தில் தலைமைக் காவலராக சியாம் லால்பால் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சர்சந்த்பூர் மாவட்ட எஸ்.பி., தலைமைக் காவலர் மீது நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆயுதம் ஏந்திய குழு மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கூடியதால் அந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீசார் வானத்தை நோக்கிச்சுட்டும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர். இதனால் கோபம் அடைந்த போராட்ட கும்பல் எஸ்.பி அலுவலகம் வெளியே இருந்த பேருந்துகள்,வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு தீ வைத்தனர்.
போலீசார் மீதும் எஸ்.பி அலுவலகம் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குக்கி இன மக்கள் மீது போலீசார் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கலவரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
What's Your Reaction?