Vishal: விஜய் ரூட்டில் சைக்கிளில் வாக்களிக்கச் சென்ற விஷால்… கண்டுகொள்ளாத ரசிகர்கள்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த விஷால், விஜய் ரூட்டில் சைக்கிளில் வாக்குச் சாவடிக்கு சென்று வந்தார்.
சென்னை: விஷாலின் ரத்னம் திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. ஹரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர், சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளர் 2ம் பாகம் இயக்கி நடிக்கவுள்ளார் விஷால். இந்நிலையில் இன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் விஷால். சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் சென்று ஓட்டுப் போட்டார். விஷால் சைக்கிளில் சென்று வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தமிழ்நாட்டில் கடைசியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, வாக்களிக்க விஜய் சைக்கிளில் சென்றார். கறுப்பு சிவப்பு நிற சைக்கிளில் விஜய் ஓட்டுப் போட சென்றது பெரியளவில் ட்ரெண்டானது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யை நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் சூழ்ந்தபடி வாக்குச் சாவடிக்குச் சென்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வாக்களித்துவிட்டு திரும்பிய விஜய், ரசிகர்களின் தொந்தரவால் சைக்கிளை போட்டுவிட்டு காரில் ஏறி பறந்தார்.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் விஜய் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்துவிட்டார். அவரைத் தொடர்ந்து விஷாலும் அரசியல் கட்சித் தொடங்குவதாகவும், 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறினார். இதனால் அதே விஜய் ரூட்டில் இன்று வாக்களிக்க சைக்கிளில் சென்று வந்தார் விஷால். விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்ததை போல, தன்னையும் கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்தாரோ என்னவோ.
ஆனால், அந்த வழியாக சவாரிக்குச் சென்ற ஆட்டோ ட்ரைவர் கூட விஷாலை கவனிக்கவில்லை. இதனையடுத்து அந்தோ பரிதாபமாக தன்னந்தனியாக வீடு போய் சேர்ந்தார் விஷால். விஜய்யை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட விஷாலுக்கு, கடைசியாக மிஞ்சியது இந்த சைக்கிள் டூர் தான் போல என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?