திடீரென வந்த சத்தம்.. பதறி அலறிய வாட்ச்மேன்..அதிமுக நகரச் செயலாளர் வீட்டின் முன் நடந்தது என்ன?

தேனி மாவட்டம் சின்னமனூரில் பெட்ரோல் குண்டு வீசி அதிமுக நகரச் செயலாளரை குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டதால் பரபரப்பு.

Sep 24, 2024 - 09:55
திடீரென வந்த சத்தம்.. பதறி அலறிய வாட்ச்மேன்..அதிமுக நகரச் செயலாளர் வீட்டின் முன் நடந்தது என்ன?

அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது. ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போடிநாயக்கனூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர செயலாளராக இருப்பவர் பிச்சைக்கனி. தொழிலதிபரான இவர் பல்வேறு சேவைகளையும் செய்து வருகிறார். குறிப்பாக கோவில்களுக்கு நன்கொடைகள் வழங்குவது, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவிகள் செய்வது, ஏழை எளியோருக்கு உதவுவது என தன்னார்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவரது வீடு மற்றும் அலுவலகம் தேனி -குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இவரது வீட்டு வாட்ச்மேனாக மாரிமுத்து என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் அவர் பணியில் இருக்கும் போது நள்ளிரவு 2 மணி அளவில் அவரது இல்லத்தின் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவரது வீட்டிற்குள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

சத்தம் கேட்டுப் பார்த்த வாட்ச்மேன் மாரிமுத்து தீப் பற்றி எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பதட்டத்தில் தீயை அணைத்தவாரே அவர் அலறியதை கேட்டு வீட்டினுள் இருந்த நகர செயலாளர் பிச்சைக்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்துள்ளனர்.

அப்போது வீட்டின் முன்பு நின்றிருந்த இரண்டு மர்ம நபர்களும் இருசக்கர வாகனத்தை  எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து நகரச் செயலாளர் பிச்சைக்கனி மற்றும் அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததை தொடர்ந்து விரைந்து வந்த சின்னமனூர் காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய பாட்டில்கள் மற்றும் வெடி மருந்து திரிகளை பரிசோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அ.தி.மு.க நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை அறிந்த அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பு குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் தடய அறிவியல் துறையினரை வரவழைத்து காவல்துறையினர் ஆதாரங்களின் மாதிரிகளை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு சிலரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி அவரை குடும்பத்துடன் கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow