குழந்தை கடத்தலா? போலியாக பிறப்பு சான்றிதழ் பெற்ற 4 பேர் கைது - திடுக்கிடும் வாக்குமூலம்!!

குழந்தை யாரிடம் இருந்து வாங்கப்பட்டது? பெற்றோர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை

Mar 31, 2024 - 00:17
குழந்தை கடத்தலா? போலியாக பிறப்பு சான்றிதழ் பெற்ற 4 பேர் கைது - திடுக்கிடும் வாக்குமூலம்!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே முறைப்படி தத்து எடுக்காத குழந்தைக்கு, போலி சான்றிதழ் பெற முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்  சந்திரகாந்தன்(43). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவாளரிடம் தனது ஒன்றரை வயது பெண் குழந்தை பிறப்புச் சான்றிதழில் சில தவறுகள் உள்ளதால் அதை திருத்தம் செய்ய வேண்டுமென கேட்டுள்ளார். தொடர்ந்து பதிவாளர் பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் ஆவணங்களை சரிபார்த்தபோது பதிவேடுகளில் முரண்பாடு இருந்ததும், சான்றிதழ் போலி என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து பதிவாளர் கேட்டபோது, பதற்றமடைந்த சந்திரகாந்த், சான்றிதழை வாங்கிக்கொண்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால்  சந்தேகம் அடைந்த பதிவாளர் இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இதுகுறித்து சந்திரகாந்தனிடம்   விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சந்திரகாந்தனுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரணத்தால் தனக்கு குழந்தை வேண்டுமென அவருடைய நண்பர்களான மதியழகன், இளங்கோ, ரமேஷ், மூவரிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் மூவரின் ஏற்பாட்டில் ஒன்றரை வருடத்திற்கு முன்பு  திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த ஒரு பெண் குழந்தையை  சந்திரகாந்தனிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் சந்திரகாந்தனும் அந்த குழந்தையை முறையாக தத்து எடுக்காமல், வளர்த்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு  பிறப்புச் சான்றிதழையும் போலியாக தயார் செய்துள்ளார். இந்த நிலையில் பிறப்புச் சான்றிதழில் பெயரை பிழை திருத்தம் செய்ய சென்றபோது மாட்டிக்கொண்டதாகவும் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார்  அப்பெண் குழந்தை யாரிடம் இருந்து வாங்கப்பட்டது? இதற்கு உடந்தையாக செயல்பட்டவர் யார்? குழந்தையின் பெற்றோர் யார்? என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow