Bank Strike: 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது....போராட்டத்தை கையில் எடுத்த ஊழியர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்று (செப்.11) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Sep 11, 2026 - 10:07
Sep 11, 2026 - 10:25
Bank Strike: 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது....போராட்டத்தை கையில் எடுத்த  ஊழியர்கள்!
Bank Employees Strike

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் சுமார் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளருமான எச்.வெங்கடாசலம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டால், வாடிக்கையாளர்களின் வணிகச் சேவைக்காக வேலை நேரத்தை நாள்தோறும் கூடுதல் 40 நிமிடங்கள் நீட்டித்து பணியாற்ற ஊழியர்கள் தயாராக இருப்பதை அரசுக்குத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோரிக்கை நிதி அமைச்சகத்திடம் நிலுவையில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நோட்டீஸ் அளித்தும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதன் காரணத்தினாலேயே வேறு வழியின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

வாரம் 2 நாள் விடுமுறை தவிர, வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் துணை ஊழியர் பணியிடங்களைப் போதுமான அளவில் நிரப்புவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டுப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்துவது மற்றும் வங்கிகளில் தொழிலாளர், அதிகாரி இயக்குநர் பதவிகளை உடனடியாக நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow