தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருது.. நடப்பாண்டு வென்றவர்கள் யார்?

2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கி கௌரவித்தார்.

Apr 15, 2025 - 14:53
தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருது.. நடப்பாண்டு வென்றவர்கள் யார்?
தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.4.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான "சிறந்த திருநங்கை விருதினை" நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ரேவதி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பொன்னி ஆகியோருக்கு திருநங்கைகளின் நலனுக்காக அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி வழங்கினார்.

தமிழ்நாடு அரசு திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அவற்றில் குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகவும். அவர்களை சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களாக அங்கீகரித்து சிறப்பிக்கும் விதமாகவும் 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் "சிறந்த திருநங்கை விருது" வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த திருநங்கை விருது:

இந்த விருதானது திருநங்கைகளின் நலனுக்காக அயராது பாடுபட்டு. சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவருக்கு வழங்கப்படுகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவால் தேர்வு செய்யப்படும் இந்த விருதாளருக்கு, திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ஆம் நாளில் விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

இந்த விருதினைப் பெறுபவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலையும். அவர்களது சேவை மற்றும் சாதனைகளைப் பாராட்டும் விதமாக சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த விருதானது திருநங்கை சமூகத்தின் 
உன்னதமான சாதனைகளை அங்கீகரிப்பதோடு, அவர்களது சமூக முன்னேற்றப் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது:

அந்த வகையில் தனது சொந்த உழைப்பாலும், தனித் திறமையாலும் முன்னேறி, பல திருநங்கை மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ. ரேவதி என்பவரின் சிறந்த சமூக சேவையைப் பாராட்டியும். திருநங்கைகள் தங்களது அயராத முயற்சியால் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை க.பொன்னி என்பவரின் சிறந்த சமூக பங்களிப்பைப் பாராட்டியும், தமிழ்நாடு அரசின் 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன். தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம். இ.ஆ.ப.. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், இ.ஆ.ப.. சமூக நல ஆணையர் ஆர்.லில்லி. இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow