ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் - திமுக கவுன்சிலர் மீது புகார் 

திமுக கவுன்சிலர் ஸ்டாலின் தனது ஆதரவாளர்களுடன் சென்று பணிகளை செய்யவிடாமல் தடுத்து மிரட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.‌

Oct 2, 2024 - 16:19
ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் - திமுக கவுன்சிலர் மீது புகார் 
குடிநீர் மற்றும் கழிவுநீர் ஓப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை விஜிபி அமுதா நகர் கூவம் நதிக்கரை ஓரம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீர் நிர்வாகம் சார்பாக கழிவுநீர் இணைப்புக் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகளை நாகராஜன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நாகராஜன் ஓப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 20 நாட்களாக 144வது வார்டு திமுக கவுன்சிலர் ஸ்டாலின்  தனது ஆதரவாளர்களுடன் சென்று குடிநீர் மற்றும் கழிவுநீர்  தொடர்பான எந்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை தொடர்பு கொண்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது.இந்நிலையில் செயற்பொறியாளர் மகாலட்சுமி மற்றும் உதவி பொறியாளர்  கலைச்செல்வி ஆகியோர் இது குறித்து விருகம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் சம்பவம் இடம் கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்டுள்ளதால் அதிகாரிகள் இருவரும் கோயம்பேடு காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தியதில்  திமுக கவுன்சிலர் ஸ்டாலின் ஒப்பந்ததாரரிடம் பணிகளை மேற்கொள்ள 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதும், அவர் பணம் தர மறுத்தால் ஆத்திரத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்று பணிகளை செய்யவிடாமல் தடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது.‌ இதனையடுத்து போலீஸார் இது குறித்து கவுன்சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow