21 முறை டக் அவுட் ஆனால்.. கம்பீர் குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

கடினமான தருணத்தில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் டி20 அணியின் கேப்டன் சூர்யாக்குமார் யாதவ் தன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதை மனம் திறந்து பேசியுள்ளார் சஞ்சு சாம்சன்.

21 முறை டக் அவுட் ஆனால்.. கம்பீர் குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!
sanju samson reveals how gautam gambhir and suryakumar trust rescued his career

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது எவ்வளவு கடினமோ, அதை விட கடினம் கிடைத்த இடத்தை தக்க வைப்பது. இதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சஞ்சு சாம்சனை குறிப்பிடலாம்.

விக்கெட் கீப்பிங் செய்வதோடு, பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிடும் ஆற்றல் கொண்ட சஞ்சு சாம்சன் எப்போது எல்லாம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குதோ அப்போது எல்லாம் சோபிக்க முடியாமல் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ரவிச்சந்திர அஸ்வின் உடனான உரையாடல் வீடியோவில் இந்திய அணியில் இடம் கிடைத்தும், என் வாய்ப்பை வீணடித்த போதும் இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் கம்பீரும், டி20 கேப்டன் சூர்யாக்குமார் யாதவும் எவ்வாறு தனக்கு பக்க பலமாக விளங்கினார்கள் என்பதை மனம் திறந்து பேசியுள்ளார்.

டி20 அணியில் ஏற்பட்ட மாற்றம்:

இந்திய அணி டி20 உலகக்கோப்பையினை வென்ற போது, இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் தங்களது ஓய்வு முடிவினை அறிவித்தார்கள். அதைப்போல், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் நிறைவுற்றது.

இதனைத்தொடர்ந்து டி20 இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யாக்குமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றார்.

சஞ்சு சாம்சன் கூறுகையில், “நான் ஆந்திராவில் துலீப் டிராபி விளையாடிக் கொண்டிருந்தேன். சூர்யா மற்ற அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் என்னிடம் வந்து, ’உனக்கு நல்ல வாய்ப்பு வரப்போகிறது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 7 டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. உன்னை தொடக்க வீரராக களமிறக்க திட்டமிட்டுள்ளோம்’ என சூர்யா என்னிடம் கூறிய போது ஓ வாவ், அருமை” என இருந்தது.

கம்பீர் சொன்ன வார்த்தை:

“ஆனால், இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் நான் சரியாக விளையாடவில்லை. நான் டிரெஸ்ஸிங் ரூமில் கொஞ்சம் சோர்வாக இருந்தேன். கவுதம் பாய் என்னிடம் வந்து, என்ன பிரச்னை என்று கேட்டார்?”

“நீண்ட நாட்களுக்கு பிறகு, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டேன்” என்றேன்.

”அதனால் என்ன? நீங்கள் 21 டக் அவுட்டாகினால் மட்டுமே உங்களை அணியிலிருந்து நீக்குவோம்” என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் என்னிடம் தெரிவித்தார். 

“இந்த வார்த்தை அந்த தருணத்தில், எனக்கு இருந்த பயத்தை போக்கியதுடன், என் மீதான நம்பிக்கையினை மீண்டும் அதிகரிக்கச் செய்தது. அதன் பின் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது” என சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

ஆசிய கோப்பைக்கான அணியில் இடம்பெறுவாரா?

சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக இதுவரை 42 டி20 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், 861 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களை அடித்துள்ளார். டி20 போட்டிகளில் சுப்மன் கில், அபிஷேக், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow