மூன்றல்ல... 12 ஃபைல்கள்... ரூ.50,000 கோடி முறைகேடு... விஜயின் மாஸ்டர் வியூகம்!
திமுக ஆட்சியின் 12 துறைகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தவறு நிரூபிக்கப்பட்டால் முன்னாள் அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தொடமாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம்' என்பதில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் விஜய், முந்தைய தி.மு.க. ஆட்சியில் 12 துறைகளில் நடந்த ஊழல்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார்.
அதேசமயம் அந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் மூலம் வேகமாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மாஜிக்கள் தேர்தலில் நிற்பதற்கே தடைவிதிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனையில் முதல்வர் இறங்கியிருப்பதுதான் கோட்டை வட்டார ஹாட் நியூஸ்!
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், 'இதுவரை திமுகவோ, அதி.மு.க.வோ ஆட்சிக்கு வந்தால் கண் துடைப்புக்காக லஞ்ச ஒழிப்பு போலீஸாரை வைத்து, மாஜிக்கள் வீட்டில் சோதனை நடத்தி, அதை வைத்து அரசியல் செய்வதுதான் வழக்கம். பெரிதாக எந்தவொரு நடவடிக்கையும் இருக்காது இந்த நடைமுறையை மாற்ற நினைக்கிறார் விஜய், அப்போதுதான் ஊழல்கள் குறையும். மக்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கை வரும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
மூன்றல்ல... 12 ஃபைல்கள்!
அதனால்தான் சட்டசபையில் தன் டேபிளில் மூன்று ஃபைல்கள் இருப்பதாகவும், அதை ஓபன் செய்ய வைத்துவிட வேண்டாம் எனவும் தி.மு.க.வுக்கு எச்சரிக்கை விடுத்தார் முதலமைச்சர். இதை சமாளிக்க 'மூன்று ஃபைல்களில் இருக்கும் விவரங்களை வெளியிட வேண்டும்' என தி.மு.க அழுத்தம் கொடுத்துவருகிறது. ஆனால், வெறும் மூன்று ஃபைல்கள் மட்டுமல்ல, முதற்கட்டமாக 12 துறைகளில் திமு.க. நடத்திய முறைகேடுகளை பொதுவெளிக்கு கொண்டுவர முடிவு செய்திருக்கிறார் விஜய் செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது, 2021 முதல் 2023 வரை டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரிப்பதால் இதில் தமிழ்நாடு அரசு தலையிட விரும்பவில்லை.
அதேசமயம், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு அனைத்து வகையிலும் உதவ முன்வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. அதேபோல, சுகாதாரத்துறையில் கொரானா காலகட்டத்தில், மாஸ்க் கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக முதல்வருக்கு சென்ற ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் நியமனம் மருந்து, மாத்திரை கொள்முதலில் முறைகேடுகள் குறித்தும் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.
மழைநீர் வடிகால்கள் எங்கே?
சமீபத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பிடி அரசகுமாரின் வாக்குமூலத்தை மட்டும் வைத்து, பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடுகளில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால், இது தொடர்பான வலுவான ஆவணங்களை திரட்டுவதில் அதிக முனைப்பு காட்டிவருகிறது அரசு நிர்வாகம். சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட 4,000 கோடி ரூபாய் முழுமையாக செலவிடப்படாமல், சுருட்டப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளும், அறப்போர் இயக்கமும் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் பணியும் வேகமாக நடந்துவருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு, முறைகேட்டில் ஈடுபட்டதாக மாஜி நகராட்சித்துறை அமைச்சர் நேரு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழவே, அவரது வீடு உட்பட அவர் தொடர்புடைய 30 இடங்களில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரால் சோதனை நடத்தப்பட்டது. இதில் 241 வலுவான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல சி.எம்.டி.ஏ. அமைப்பின் முதன்மைப் பணி, திட்ட அனுமதி வழங்குவது மட்டுமே ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் செய்யவேண்டிய 3,000 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை சி.எம்.டி.ஏ மூலம் மேற்கொண்டதில் முறைகேடுகள் மற்றும் டெண்டரில் ஊழல்கள் நடந்ததாக பா.ம.க. மற்றும் அறப்போர் இயக்கம் பகிரங்கமாக புகாரை கிளப்பியிருக்கின்றன.
பொங்கல் தொகுப்பிலும் முறைகேடு?
இதேபோல் கால்நடை மற்றும் மீன்வளத்துறை முறைகேடுகளும் முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றன. கால்நடை மருந்தகங்களில் மருந்துகள் கொள்முதலில் நடந்த முறைகேடுகள், தற்காலிகப் பணியாளர்களை நியமிப்பதில் நடந்த திரைமறைவு பேரங்கள் என பல விவகாரங்கள் குறித்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் தொகுப்பு கொள்முதல் பணிகளில் காலதாமதம் செய்யப்படுவதாகவும். உற்பத்தியாளர்களிடம் கமிஷன் பெறப்பட்டதாகவும் பாஜக மற்றும் சில விவசாய சங்கங்கள் புகார் தெரிவித்தன. இதுகுறித்து அதிமு.க தரப்பில் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, கல்குவாரிகளில் விதிமுறைகளை மீறி நடந்த முறைகேடுகள் மற்றும் கனிமவள க்கொள்ளை காரணமாக அரசுக்கு 700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் சார்பில் சமீபத்தில் அமைச்சர் பிரபுவிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியாக மொத்தம் 12 துறைகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முறைகேடுகளை திமுக அரசு நிர்வாகம் நடத்தியிருப்பதாக முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கேட்டுக்கொண்ட முதல்வர் விஜய் சிறப்பு நீதிமன்றம் அமைத்து, விரைவு நீதிமன்றங்களில் நடைபெறுவதுபோல் விசாரணையை வேகமாக நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கெல்லாம் ஆதாரங்கள் மிக முக்கியம். அரசுத் தரப்பில் வழங்கப்படும் ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். எனவே முறைகேடுகளுக்கான ஆவணங்களை திரட்டுவதற்கு முனைப்பு காட்ட தவெக அரசு தீவிரம் காட்டிவருகிறது" என முடித்தார்.
இதுகுறித்து மாஜி அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, "தவெக அரசு பூச்சாண்டி காட்டுகிறது. பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறது. தவறு செய்யாத நாங்கள் இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. எதையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என்றார் உறுதியாக
பார்ப்போம்!
What's Your Reaction?