10 லட்சம் பணம்… 50 சவரன் நகை.. மோசடியில் ஈடுப்பட்ட திருச்சி சிவா மகள் – மருமகன்..? – பெண் மருத்துவர் பகீர்!
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகளும் மருமகனும் பணம் மற்றும் நகை மோசடியில் ஈடுப்பட்டதாக பெண் மருத்துவர் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பி.பிளாக் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வினா விலாசினி (வயது 46). இவரது கணவர் நிர்மல். கணவன்- மனைவி இருவரும் சென்னை அயனாவரம் சயானி காம்ப்ளக்ஸ் பகுதியில் நவீனா மல்டி ஸ்பெஷாலிட்டி என்ற பெயரில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹோமியோபதி பெண் மருத்துவரான விலாசினி, சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் திமுக திருச்சி எம்பி சிவாவின் மகள் மற்றும் மருமகன் மீது மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து கடந்த ஜூன் 27 ஆம் தேதி அவர் அளித்த புகாரில், ”பெண் மருத்துவரான நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, அதே கட்சியில் இருந்த திருச்சியை சேர்ந்த கராத்தே முத்துகுமாருடன் நட்பாக பழகினேன். முத்துகுமார் திமுக எம்பி திருச்சி சிவாவின் மூத்த மருமகன் ஆவார். முத்துகுமார் மற்றும் அவரது மனைவியும், திருச்சி எம்பி சிவாவின் மகளுமான காயத்திரியும் எங்களுடன் குடும்ப நண்பர் போல் பழகி வந்தனர். அவ்வபோது அவசர தேவைக்காக சிறிது சிறிதாக கடன் வாங்கி, தற்போது அது 10 லட்சம் கடனாக இருக்கிறது” என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ”கடந்த 2023 ஆண்டு திமுக எம்பி திருச்சி சிவாவின் மகள் காயத்திரி தனது தங்கைக்கு பிரச்சினை என்றும், அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறினார். தன்னிடம் பணம் இல்லை என்ற போது தங்க நகையை தாருங்கள் அதை வைத்து பணம் வாங்கி கொள்கிறேன், சில நாட்களில் அதை திருப்பி தருவதாக கூறியதை நம்பி முதலில் 26 சவரன் தங்க நகைகளையும், அதன் பின்னர் 24 சவரன் நகை என மொத்தம் 50 சவரன் தங்க நகையை கொடுத்தேன்.
நீண்ட நாட்கள் ஆகியும் முத்துகுமார் வாங்கிய 10 லட்சம் பணம், காயத்திரி வாங்கிய 50 சவரன் நகை திரும்பி வரவே இல்லை. அவர்களிடம் சென்று திரும்பி கேட்ட போது, காயத்திரி 24 சவரன் நகையை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு பாக்கி பணம், நகையை விரைவில் தருவதாக கூறினார்.
ஆனால் அவர்கள் கூறியது போல் பணம், நகை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததால் இது குறித்து அவர்களிடம் கேட்டேன். அப்போது இருவரும் பணம், நகை திருப்பி தரமுடியாது என கூறி மிரட்டல் விடுத்தனர்” என்று மருத்துவர் விலாசினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 10 லட்சம் பணம் , 26 சவரன் தங்க நகைகளை வாங்கி கொண்டு ஏமாற்றிய திமுக எம்பி திருச்சி சிவாவின் மகள் காயத்திரி, மருமகன் முத்து குமார் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணம் நகையை காவல்துறை மீட்டு தரவேண்டும் என விலாசினி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹோமியோபதி பெண் மருத்துவர் விலாசினி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?