மாறும் பாஜக தலைமை? நயினாரை இழுக்கும் அதிமுக? கமலாலயம் பறந்த சிக்னல்..!
தமிழக பா.ஜ.க தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனை மாற்றி புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக டெல்லி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், நயினாரை மீண்டும் அதிமுகவிற்குள் இழுக்க எம்.ஜி.ஆர் மாளிகையில் இருந்து கிரீன் சிக்னல் அனுப்பபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக தமிழக பா.ஜ.க. அமைப்பு நடவடிக்கைகள், எதிர்கால அரசியல் கூட்டணி கணக்குகள் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்தும், அண்ணாமலையின் புதிய அரசியல் பிரவேசம் பாஜகவை பாதிக்கத் தொடங்கியதாலும் கட்சியை மறுசீரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில்தான் மாநிலத் தலைமை மாற்றம் குறித்த விவாதங்களும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் மாற்றப்படுமானால், அதற்கு ஈடாக அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி அல்லது ஆளுநர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்டகால அரசியல் அனுபவமும், தென் தமிழகத்தில் அவருக்குள்ள செல்வாக்கும் கருத்தில் கொள்ளப்பட்டு, அவருக்கு முக்கியமான அரசியல் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க. தலைமையும் நயினார் நாகேந்திரனை மீண்டும் தங்களது அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள நயினார், மீண்டும் அந்தக் கட்சிக்கு திரும்பினால் தென் மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்ற கணிப்பில் அக்கட்சித் தலைமை இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘‘நீங்கள் மீண்டும் வந்தால் தென் மாவட்டங்களின் பொறுப்பை ஏற்று முழுமையாக செயல்படலாம்; அப்பகுதியில் கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தலாம்’’ என்ற வகையில் அவருக்கு அதிமுக தரப்பில் இருந்து சிக்னல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நயினார் நாகேந்திரனுக்கு தனிப்பட்ட ஆதரவாளர்கள் வட்டம் இருப்பதால், அவரை மீண்டும் இணைத்துக் கொள்வது அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ரீதியாக பலன் அளிக்கக்கூடும் என்ற மதிப்பீடும் நிலவி வருகிறது.
எனினும், பாஜக மாநிலத் தலைமை மாற்றம், ராஜ்யசபா அல்லது ஆளுநர் பதவி வழங்கப்படுவது, அத்துடன் அ.தி.மு.க.வின் அழைப்பு போன்ற தகவல்கள் அனைத்தும் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் யூகங்களாகவே உள்ளன.
இதுகுறித்து பா.ஜ.க. அல்லது அ.தி.மு.க. தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?