நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு கொடூரமானது- ராகுல் காந்தி விமர்சனம்!
8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தெரு நாய்க்கடி சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தெரு நாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
இந்நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அடங்கிய அமர்வு, டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை உடனடியாக அகற்றி தங்குமிடங்களுக்கு மாற்றத் தொடங்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவு நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்தனர். இந்த பணியினை மேற்கொள்ள 8 வாரக்காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு வழங்கி வரும் நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள், பீட்டா போன்ற விலங்கு நல அமைப்புகள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து நேற்றையத் தினம் (திங்கள்கிழமை) டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன் விலங்குகள் நல அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 12) தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு "கொடூரமானது" மற்றும் "குறுகிய பார்வை கொண்டது" என்று கடுமையாக சாடியுள்ளார்.
இதுத்தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் “டெல்லியில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு, பல தசாப்தங்களாக மேம்பட்டு வந்த மனிதாபிமான, அறிவியல் சார்ந்த கொள்கையிலிருந்து ஒரு அடி பின்வாங்குவதாகும்.
இந்த குரலற்ற ஆன்மாக்கள் (நாய்கள்) அழிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் அல்ல. காப்பகங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகியவை மூலம் பொது பாதுகாப்பையும் விலங்குகள் நலனையும் ஒருசேர உறுதி செய்ய முடியும்" என பதிவிட்டுள்ளார்.
விசித்திரமான தீர்ப்பு: மேனகா காந்தி
பாஜக முன்னாள் எம்.பி-யும், விலங்கு நல ஆர்வலருமான மேனகா காந்தி, "இது சாத்தியமில்லாத உத்தரவு. கோபத்தில் இருக்கும் ஒருவரால் வழங்கப்படும் மிகவும் விசித்திரமான தீர்ப்பு இது. கோபமான தீர்ப்புகள் ஒருபோதும் விவேகமானவை அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “டெல்லியில் லட்சக்கணக்கான தெரு நாய்கள் உள்ளன. அனைத்து வசதிகளுடன் காப்பகம் உருவாக்க ரூ.15,000 கோடி தேவைப்படும். அதற்கு சாப்பாடு போட வாரம் ரூ.5 கோடி வேண்டும். இது சாத்தியமா?. நாய் கடித்து சிறுமி உயிரிழந்ததாக ஏதோ ஒரு போலிச் செய்தியை வைத்து, உச்ச நீதிமன்றம் கோபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெருவில் இருந்து நாய்களை எல்லாம் அகற்றிவிட்டால், அடுத்து குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்?” எனவும் மேனகா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
What's Your Reaction?






