அதிமுகவில் 2 விக்கெட் அவுட்? தட்டித் தூக்கும் தவெக..?

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கட்சித் தாவிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர்களான இரண்டு விஜயபாஸ்கர்களும் தவெகவில் ஐக்கியமாக உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் எம்.ஜி.ஆர் மாளிகையை ஆட்டம் காண வைத்துள்ளது.

அதிமுகவில் 2 விக்கெட் அவுட்? தட்டித் தூக்கும் தவெக..?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி தலைமையிலான அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது. பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபிக்க வேண்டிய சூழலில், எடப்பாடி அணி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக இருந்தது. ஆனால், சிவி சண்முகம் அணியானது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இத்தகையச் சூழலில், சிவி சண்முகம் அணி ஆதரவோடு தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஆதரவளித்த சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்தவெகவோ சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களை தன் பக்கம் இழுக்க ஆரம்பித்ததால், அந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பினர். ஆனால் சிவி சண்முகம் அணியில் இருந்த விஜயபாஸ்கர் போன்றோர் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெகவில் ஐக்கியமாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சி.விஜயபாஸ்கரை பொறுத்தவரை, தேர்தலுக்கு முன்பிருந்தே எடப்பாடி தலைமையிலான அதிமுக மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், திமுகவில் ஐக்கியமாகிவிடலாம் என்ற யோசனையில் அவர் இருந்ததாகவும், அதற்காக திமுக தலைமையிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சியை இழந்ததும், தவெக பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருபக்கம், சி.விஜபாஸ்கர் என்றால் மறுபக்கம் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பனையூர் பக்கம் தன்னுடைய வண்டியை திருப்ப முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக சி.விஜயபாஸ்கர் உடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், அண்மையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது பேசிய அவர், "நானும், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. அது முற்றிலும் வதந்தி. சில ஊடகங்கள் எந்தவொரு ஆதாரமும் இன்றி இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றன" என்று திட்டவட்டமாகக் கூறி வதந்திகளுக்குப் பதிலடி கொடுத்தார்.

இருந்தபோதும், இவர்கள் இருவரும் ஏற்கனவே பனையூரில் டீலிங்கை முடித்துவிட்டதாகவும், ஜூன் 22 ஆம் தேதி முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் முன்னிலை இணையப்போவது உறுதி என்றும் அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow