குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம் ... அசைந்தாடி வந்த அம்மன் சிரசு.. மெய்சிலிர்த்த பக்தர்கள்

May 14, 2024 - 18:22
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம் ... அசைந்தாடி வந்த அம்மன் சிரசு.. மெய்சிலிர்த்த பக்தர்கள்

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக வந்த காட்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 

ஜமதக்னி முனிவர் - ரேணுகா தேவி மற்றும் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமன் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா நடைபெறுகிறது. கந்தர்வனின் அழகைக் கண்டு மயங்கி கற்பு நெறி தவறிய குற்றத்திற்காக தாய் ரேணுகா தேவியின் தலையையும் அவரைக் காப்பாற்ற வந்த வெட்டியான் மனைவியின் தலையையும்  வெட்டினார் பரசுராமன். இதையடுத்து தந்தை ஜமதக்னி முனிவரிடம் வரம்பெற்று தாயை மீண்டும் உயிர்பித்தார். அப்போது தவறுதலாக வெட்டியான் மனைவியின் உடலில் ரேணுகா தேவியின் தலையையும் ரேணுகா தேவியின் உடலில் வெட்டியான் மனைவியின் உடலிலும் மாற்றிப் பொருத்திவிடுகிறார் பரசுராமன். இந்த நிகழ்வுதான் இன்றளவும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா, வைகாசி ஒன்றாம் தேதியான இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. வழக்கமாக காலை 6 மணிக்கு தரணம்வேட்டை முத்தாலம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு 10 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலை சிரசு வந்தடையும். ஆனால் இந்த முறை அதிகாலை 4 மணிக்கே கோயிலில் இருந்து சிரசு புறப்பட்டது. 

வழிநெடுகிலும் கெங்கையம்மன் சிரசு மீது பக்தர்கள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். வெள்ளம்போல் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் அம்மனின் சிரசு தேர்போல் அசைந்தாடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

இதையடுத்து கோபாலபுரத்தில் கெங்கையம்மன் கோயிலில்  உள்ள அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டது. பிறகு அம்மன் கண் திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். உடைக்கப்பட்ட தேங்காய்களை ஏராளமானோர் போட்டி போட்டிக் கொண்டு அள்ளினர். 

கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவில், தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிரசு திருவிழாவைக் காண வந்த மக்கள் கூட்டத்தால் குடியாத்தம் நகரம் கொண்டாட்ட நகரமாக காட்சி அளித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow