மின்சார உதடுகள்- தியாகியா நீ!
மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.
எல்லாக் காலகட்டத்திலும் ஏ.சி போட்டுவிட்டதுபோல குளுகுளுவென இருக்கும் கோயம்புத்தூர். இளம் காலை நேரம்.
நடக்க இருக்கிற விபரீதம் தெரியாமல், சில பேர் 10 குடித்துக்கொண்டு இருந்தார்கள். அறிவுஜீவிகள் இரண்டு பேர், பேப்பரைப் பிரித்துத் தங்கள் பொது அறிவையும் பிளட் பிரஷரையும்
ஏற்றிக்கொள்ளத் தயாரானார்கள். ராதிகாவும், இனியாவும் அவசர நடையில் அந்த டீக் கடையில் நுழைந்தார்கள்.
"இனியா, திஸ் ஈஸ் டூ மச்! நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்!"
ராதிகா சொல்வதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், "அண்ணே, ஒரு டீ; சக்கரை கம்மியா ஒரு பால்..." என்று ஆர்டர் கொடுத்துவிட்டு, அங்கிருந்த நாளேட்டை எடுத்தாள் இனியா.
பிப்ரவரி 14ஆம் நாள், வருஷம் 1998 என்று, அங்கிருந்த சரஸ்வதி படம் போட்ட காலண்டரில் போட்டிருந்தது.
அந்த டீக்கடை, கோவை ரயில் நிலையம் பக்கத்தில் இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு சைக்கிள் ஸ்டேண்ட்.
சாயங்காலம் 3:50க்கு அங்கே குண்டு வெடிக்கப் போகிறது!
ராதிகா இனியாவின் கன்னத்தைத் தன் பக்கம் திருப்பிக்கொண்டே, "என்ன... நான்பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். நீ பேப்பர் பார்த்துட்டிருக்கே... நீ என்ன பெரிய தியாகியா..?” என்றாள்.
பால் கிளாஸுக்காக இடது கையை நீட்டிக்கொண்டே, இனியா பேப்பரைத் தாழ்த்தி பதில் சொன்னாள்... "அம்மா இப்போதான் ஓரளவு அமைதியா இருக்காங்க. நீ பரீட்சை எழுதவும் அலவ் பண்ணி இருக்காங்க! யாராவது ஒருத்தர் அவங்களோட இருக்கணும் இல்லையா?"
கேள்வி கேட்டுவிட்டு, இனியாவே தொடர்ந்தாள்... “ஓடக்கல் பாளையத்தில் இருந்து ஒலகளாவிய சிந்தனையோடு உள்ள ரெண்டு பொண்ணுங்களும் போய்ட்டா, தனியா இருக்கிற அம்மாவை யாரு பாத்துப்பாங்க?"
இவர்கள் இரண்டு பேரும் தோழிகள். ராதிகாவின் அம்மா கௌரிக்கு திடீரென மாரடைப்பு! அவரை நேற்று இரவு எம்.ஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்கள். இருவருமே பி.எஸ்ஸி ஃபிஸிக்ஸ் மாணவிகள். கோவை அரசினர் கலைக்கல்லூரி.
இருவருக்குமே மணிரத்னம் படம் பிடிக்கும். அ.முத்துலிங்கம் எழுத்து பிடிக்கும். கிரிக்கெட் பிடிக்கும். கவிதைகள் பிடிக்கும். வாழ்க்கையை அழகாக வாழப் பிடிக்கும்.
"அவரு போய்ச் சேர்ந்தப்புறம் பத்து வருஷமா உன்னைப் பக்குவமா வளர்த்துட்டேன். என்ன... உன்னை ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டுப் போகணும்னு பார்க்குறேன்... நீதான் கொஞ்சம் சொல்லேன்!" ஐ சி யூ வின் ஈ.சி.ஜி மீட்டரைப் பார்த்துக் கொண்டே அமைதியாய் நின்றிருந்த இனியாவைத் துணைக்கு இழுத்தார் அம்மா.
காலையில் இரண்டு ஸ்டென்ட் வைத்த பிறகு ஐ.சி.யூவிற்குள் படுத்துக்கொண்டு சொன்ன சொற்கள்! நர்ஸுகள் சீக்கிரம் வெளியேறச் சொன்னதால், சாப்பிட எதாவது வாங்கிப் போகலாம் என்று வந்திருந்தார்கள்.
ராதிகா பி.எஸ்ஸியில் கோல்ட் மெடலிஸ்ட்! இனியா அந்த வருஷம் பெஸ்ட் அத்லெட்!
இருவருமே அம்மாவோடு இருக்கவும், அதே சமயம், சிவில் சர்வீஸ் எழுதவும் ஆசைப்பட்டார்கள். அப்புறம், போஸ்ட்டிங் போட்டால், மொழி தெரியாத தேசத்துக்குக்கூடப் போக வேண்டி வரும் என்று தெரிந்து, கௌரியம்மா கவலையானார். "கலெக்டரம்மா ஆனாலும், கலெக்டரோட அம்மா பக்கத்துல இருக்க முடியுமா?" என்பதே அவரின் கேள்வி.
ராதிகாவால் அம்மாவின் உணர்வைப் புரிந்துகொள்ள முடிந்தது. இனியாவிற்கு அம்மா பொண்ணு, இரண்டு பேரையுமே வெற்றி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
பி.ஏ.பி வாய்க்கால் ஓடுகிற பாதை அருகே இருந்தது அவர்களின் தோட்டம். கொஞ்ச நாள்களாகவே இந்த விவாதங்கள் அவர்களுடைய தென்னை மரத்தடி பிரேக்ஃபாஸ்ட் சந்திப்பில் முக்கிய இடம் பெறும். இந்த டிஸ்கஷன் கடைசியில் இனியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோர் செவியில்தான்முடிவுக்கு வந்தது.
"அம்மா... சொல்லுங்க... நான் உங்க பொண்ணு இல்லியா?”
இனியாவின் கேள்விக்குக் கௌரியால் பதில் சொல்ல முடியவில்லை.
ராதிகாவுக்கு வேறு பதில் வைத்திருந்தாள் இனியா. “நீ ஒரு சாம்பியன் மெட்டீரியல்டீ! கோல்ட் மெடலிஸ்ட் ஹேரி மெடாக்ஸ், ஹவ் டு ஸ்டடி' புத்தகத்தையே உன்னை மாதிரி படிக்கிற பொண்ணைப் பார்த்துதான் எழுதியிருப்பார்."
கௌரியம்மாவுக்கு உள்ளூற ஆசைதான்... 'பொண்ணைப் படிக்க அனுப்பணும்!
அதே நேரம், அவளைக் கண்ணுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் யோசித்தார். ஹாஸ்பிட்டலில் அவர் இருந்தபோதுதான் கோவை குண்டுவெடிப்பு பற்றிய செய்திகள் வெளிவந்தன.
ராதிகா கடைசியில் ஒருநாள், அவர்களுடைய ஓடக்கல் பாளையம் செம்பூ தோட்டத்தில், எல்லாரும் இருக்கும்போது, 15.4.1998 அன்று காலை 10 மணிக்கு ஒரு முடிவுக்கு வந்து பேசினாள்... "எல்லோரும் கேட்டுக்கோங்க. நான் டாஸ் சுண்டிப் போடுறேன் ஹெட் விழுந்தா இனியா விட்டுத் தருவா. டெய்ல் விழுந்தா நான் விட்டுத் தருவேன். அம்மாவோடு யார் இருப்பது என்று இந்த நாணயம் முடிவு செய்யட்டும்!”
அவள் சுண்டிப்போட்ட ஒரு ரூபாய் காய்ன்...
'டெய்ல்'
இனியா தன் சேவையை வீட்டுக்கும், ராதிகா நாட்டுக்கும் தருவதென முடிவாயிற்று.
அதே சமயம், இன்னொரு உலகத்தில் இனியா ஐ.பி.எஸ் ஆகவும், ராதிகா காவல்துறை உதவி ஆய்வாளராகவும் உருவாகிற நிகழ்வு நடக்கப்போகிறது.
What's Your Reaction?