ஹோட்டல் பிசினஸ் தொடங்கப் போறீங்களா? வருகிறது புதிய ரூல்ஸ்!
ஹோட்டல் பிசினஸ் தொடங்க திட்டமிடுபவர்கள், தன் வாடிக்கையாளர்களுகக்கு இனிமேல் சைவ உணவுகளை தயாரித்து வழங்கப் போகிறார்களா? அல்லது அசைவ உணவுகளையும் வழங்கப் போகிறார்களா? என்பதை முன்கூட்டியே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒரு புதிய விதிமுறையினை, புவனேஸ்வரில் நடைப்பெற்ற மத்திய ஆலோசனைக் குழு கூட்டத்தில் முன்மொழிந்துள்ளது என பிரபல வணிக ஊடகமான மிண்ட் (mint) செய்தி வெளியிடுள்ளது.
அதன்படி, உணவகங்கள் தங்கள் பதிவு அல்லது உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, தாங்கள் தயாரிக்கு உணவு வகை (சைவம் அல்லது அசைவம்) எது என்பதனை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அசைவ உணவகங்கள், மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி விற்பனை செய்யத் திட்டமிட்டால் அதையும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு தெளிவான தகவலை அளிப்பதும், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மரியாதை அளிப்பதுமே ஆகும் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச அரசின் பரிந்துரையா?
இந்த திட்டமானது உத்தரப்பிரதேச அரசின் பரிந்துரையின் பேரில் முன்மொழியப்பட்டுள்ளது என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் மிண்ட் செய்தி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். சமீப காலங்களாக, உத்தரப்பிரதேசம் உட்பட சில வட மாநிலங்களில் அசைவ உணவகங்களை குறிவைத்து சில தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது செயல்பட்டு வரும் உணவகங்களும் எதிர்காலத்தில் இந்தத் தகவலைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. ஒரு சைவ உணவகம், அசைவ உணவகமாக மாற விரும்பினால் அதற்கு முதலில் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களுக்கான டிஜிட்டல் தரவுத்தளம்:
FSSAI-ன் இந்த முடிவு, உணவகங்கள் தொடர்பான நாடு தழுவிய டிஜிட்டல் தரவுத்தளத்தை (Data base for hotels) உருவாக்க உதவும் என கூறப்படுகிறது. இந்தத் தரவுத்தளம் மூலம் எந்தெந்த உணவகங்கள் அசைவ உணவுகளை வழங்குகின்றன, எந்த வகை அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன என்பதை அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.
இதன் அடிப்படையில், அதிக ஆபத்துள்ள உணவுகளை (விரைவாக கெட்டுவிடும் மாமிசம், மீன், முட்டை போன்றவை) விற்கும் உணவகங்களுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியும். மேலும், வெவ்வேறு அசைவ உணவுகளுக்குத் தனித்தனி சேமிப்பு வசதிகள் உள்ளதா? என்பதையும் அதிகாரிகள் சரிபார்ப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியும் குறைந்தது மாதத்திற்கு 10 உணவகங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரச்னை சைவம்- அசைவம் உணவிலா?
பொது சுகாதார நிபுணரும் இந்திய மருத்துவ சங்கத்தின் (கொச்சின்) முன்னாள் தலைவருமான டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில், "இறைச்சி அல்லது மீன் பரிமாறும் உணவகங்களில் மட்டுமே உணவு விஷமாக ஏற்படுகிறது என்பது ஒரு பொதுவான கட்டுக்கதை” என குறிப்பிட்டுள்ளார். "உண்மையில், உணவகம் சைவமா அல்லது அசைவமா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஊழியர்களிடையே மோசமான சுகாதாரம், அசுத்தமான உபகரணங்கள், முறையற்ற சேமிப்பு மற்றும் விநியோகம் போன்ற பல காரணிகள் உணவு கெட்டுப் போவதற்கு காரணங்களாக உள்ளன. எனவே, அனைத்து வகையான உணவகங்களும் உணவுப் பாதுகாப்புத் தரங்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” என்று ராஜீவ் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய விதிமுறை வரும் மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இதை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
What's Your Reaction?






