சொந்த ஊரில் உள்ள கோயில்களை
‘சும்மா’ விட்டுடாதீங்க..!
இப்போது நாம் எந்த ஊரில் பிழைப்புக்காக இருந்தாலும், சொந்த ஊர் மண்ணை மிதிக்காமல் இருக்கக்கூடாது. சொந்த ஊரில் அமைந்திருக்கிற ஆலயங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும். அந்த தெய்வங்களை ஆராதனை செய்யவேண்டும் என்பது நம் வாழ்வின் அடிப்படைகளில் மிக மிக முக்கியமானவை என்று காஞ்சி மகாபெரியவா அருளியிருக்கிறார்.
தீபாவளிக்கு வெடி வைப்போம். கோயில் விழாக்களிலும் திருமணம் முதலான வைபவங்களிலும் வெடி வைத்து, வாணவேடிக்கை நிகழ்த்துவோம். அண்ணாந்து பார்த்து வானத்தில் தெறித்து விழுகிற ஒளியைக் கொண்டது என்பதால், பலரும் வான வேடிக்கை, வானத்தில் உயரத்தில் நடக்கிற வெடி வேடிக்கை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வான வேடிக்கை என்பது சரி அல்ல; வாணவேடிக்கை என்பதுதான் சரி. வாணம் என்றால் வெடி என்று அர்த்தம்!
திருவிழா முதலான வைபவங்களில், வந்திருக்கும் மக்களை, குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக வெடி வைப்பார்கள்.
பட்டாசு கொளுத்துவார்கள். அந்தக்காலங்களில், ஊர் என்பது சிறிதாக இருந்தது. சுற்றிலும் காடுகள் இருந்தன. தோட்டம்தொறவுகள் அதிகமாக இருந்தன. கோயில்களும் வனப்பகுதிக்குள் இருந்தன. ஆதிகாலங்களில், முனிவர்களும் யோகிகளும் சித்தர்களும் தவமிருந்த இடங்கள், வனங்களில்தான் என்பதால், அந்த வனத்தில் ஆலயங்களை மன்னர்கள் அமைத்தார்கள் என்பது வரலாறு. அதனால்தான் சித்தர்கள் தவமிருந்த, பூஜைகள் செய்த இடங்களில் கட்டப்பட்ட கோயில்களுக்கு சாந்நித்தியம் இன்றைக்கும் குறையறாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்!
ஆலயங்களுக்கு விழாக்கள் நடைபெறும். விசேஷங்கள் கோலாகலமாக நடந்தேறும். கோயில் விழா, பெருந்திருநாள், கோயில் கொடை முதலானவற்றின் போது, எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்து, கலந்துகொண்டு, உறவுகள் சூழ, தோழமைகள் சூழ வருகிற பக்தர்கள் ஏராளம். இதனால் அவரவரும் தங்களுக்குத் தோன்றுவதை கோயிலுக்கு வழங்குகிற வழக்கம் இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது.
கோயில் சிறப்புற இருப்பதற்காகவும் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் தடையின்றி நடப்பதற்காகவும் ஊர்க்காரர்கள் வருடத்துக்கு ஒருமுறை கோயிலுக்கு நன்கொடை என ஒரு தொகையைக் கொடுப்பார்கள். ஊரில் உள்ள எல்லாத் தெருவில் குடியிருப்பவர்களாக இருந்தாலும் வேலை நிமித்தமாக வெளியூரிலோ வெளிமாநிலங்களிலோ வெளிநாட்டிலோ வாழ்ந்து வந்தாலும் கோயிலுக்கான நன்கோடைகளை மறக்காமல் செலுத்துகிறார்கள் ஊர்மக்கள். ஊர்கூடி தேரிழுப்பது என்று சொல்வது போல், ஊர்கூடி கோயிலைக் காப்பது என முடிவு செய்து இன்றைக்கும் வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.
தொழில் மற்றும் வியாபாரம் செய்கிற பலரும் திருப்பதி ஏழுமலையானை தன் பார்ட்னர் போல் நினைத்து, குறிப்பிட்ட சதவிகிதம் சேர்த்து, திருப்பதி உண்டியலில் செலுத்துகிற பக்தர்கள் ஏராளம். அதேபோல், தனக்கு இஷ்ட தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்கு அடிக்கடி சென்று தரிசிப்பதுடன் அந்த்க் கோயில்களுக்கு அடிக்கடி ஏதேனும் சிறிதாகவோ பெரிதாகவோ நன்கொடைகள் செய்து, இறைவனின் அணுக்கர்களாக இருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் சொந்த ஊரில் பரம்பரை பரம்பரையாக முன்னோர்கள் காலந்தொட்டு வழிபட்ட கோயில்களை ஒருபோதும் மறக்கக்கூடாது; வழிபடாமல் இருக்கக்கூடாது; நாமும் நம் குழந்தைகளும் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு, நம் கிராமத்தின் தெய்வங்களே துணைநிற்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
ஆகவே சொந்த ஊர் தெய்வங்களுக்கு வஸ்திரம் வழங்குவது மிக மிக நல்லது. நைவேத்தியங்களுக்கு, தீபதூப ஆராதனைகளுக்கு, கோயிலுக்கு வருகிற பாதையை சீரமப்பதற்கு, கோயிலையே சீரமைத்துப் புனரமைக்கும் பணிகளுக்கு நம்மால் முடிந்த தொகையை, வருடத்துக்கு ஒருமுறையேனும் செலுத்தவேண்டும். ‘எங்க முப்பாட்டான்களுக்கு முன்பிருந்தே இந்தக் கோயிலை வழிபட்ட்டு வந்திருக்கிறார்கள்.
அவர்களைப் பின்பற்றி, அவர்களின் வம்சத்தினரான நாங்களும் வணங்குகிறோம். இந்த மண்ணின் மைந்தர்கள் நாங்கள். இந்த மண்ணைக் காப்பது போல் எங்களையும் காப்பாள்; காபந்து செய்வாய்’ என்று வேண்டிக்கொள்ளுங்கள். முன்னோர்கள் வழங்கிய, நம் சொந்த ஊர்க் கோயில்களுக்குச் செய்யும் திருப்பணிகள், மும்மடங்காக நம் குழந்தைகளுக்கு நம் சந்ததியினருக்கு வந்து சேரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
- வி.ராம்ஜி