மின்சார உதடுகள்- வெற்றிக்குப் பின்னால் பெண்!
"மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.
4.வெற்றிக்குப் பின்னால் பெண்!
"சில்வியாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?" எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாத குரலில் கேட்டார் இனியா.
தனது ட்ரெய்னிங்கிற்காக நியூயார்க் வந்திருந்தவர் தகவல் கிடைத்ததும் 24/8/25ல் நியூயார்க்கிலிருந்து கிளம்பி, முதலில் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டார்.
ஃபார்மாலிட்டிகள் எல்லாம் முடிந்து உடலைத் தமிழ்நாட்டுக்கு எடுத்துச் செல்வதா, அல்லது, மைக்கேலின் சொந்த ஊரான டெல்லிக்கு எடுத்துச் செல்வதா என்று கேட்டபோது... அங்கேயே மசாசூசெட்ஸில் காரியங்கள் செய்துவிடுமாறு சொல்லிவிட்டார் ராதிகா.
உடலை அங்கேயே சாம்பலாக்கி சார்லஸ் நதியில் கரைத்துவிடலாம்.
கொஞ்சம் ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாக இருந்தாலும், எமோஷனல் இன்டலிஜென்ஸில் பயிற்சி பெற்றிருந்த இனியா சமாளித்துக்கொண்டு. சில்வியா ஏன் இறந்தாள் என்று கண்டுபிடிக்க விரும்பினார்.
ராதிகா அந்தத் தேதியில் ஒகினாவா தீவில் உள்ள ஒகீமி கிராமத்திற்குச் சென்றுவிட்டார். அந்தக் கிராமம் ‘நீண்ட நாள் வாழ வைக்கும் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. 'இக்காய்' என்கின்ற புத்தகத்தில் இந்தக் கிராமத்தைத்தான் இரண்டு ஸ்பெய்ன் எழுத்தாளர்கள் கவர் செய்து ஆராய்ந்து எழுதினார்கள்.
'இன்று மாலை 4 மணிக்குப் பேசலாம்' என்று ஃபிக்ஸ்செய்திருந்தார்கள்.
"இதைச் செய்தவர்கள் யாரென்று கண்டுபிடிப்பது இரண்டு காரணங்களால் மிக முக்கியம். ஒன்று, நம் குழந்தையின் மரணத்திற்குப் பழி தீர்த்து, குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தருவது. இரண்டாவது... அவன் யார், அவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள், அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது!" இப்படியாக வெகு உயரத்திலிருந்து இனியாவிடம் பேசியிருந்தார் மைக்கேல். அவரும் உடனே நேரில் வரமுடியாத இடத்திலிருக்கிறார்.
ஏஜெண்ட் நிக்கோலஸ் இனியாவைச் சந்தித்தார். இருவரும் சற்றுநேரம் பேசினார்கள். இறுதியாக நிக்கோலஸ், “உங்களுடைய நாடு இந்த மரணத்தைக் கொலையாகப் பார்க்கிறது. ஆனால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அப்படி இல்லை".
ஒரேடியாக இப்படிச் சொல்ல, இனியா தன் அதிருப்தியை லேசாக வெளியிட்டார்.
"தட்ஸ் ஸ்ட்ரேஞ்ச் நிக்கோலஸ். சில்வியா ஆரோக்கியமான பெண். மரணத்திற்குக் காரணம் என்ன?”
எவ்வளவு மறைக்க முயன்றும், இனியாவின் கோபம் கொஞ்சம் சிந்தியது சொற்களில். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தது போலிருந்த நிக்கோலஸ் சட்டென்று பேசத் தொடங்கினார்.
"இனியா... ஒரளவிற்கு உங்களுக்குப் பதில் கூறலாம். ஆனால், இந்த கேஸ் குறித்து இதற்கும் மேல் பேச எனக்கு விருப்பம் இல்லை. எஃப்.பி.ஐ வசம் விசாரணையை ஒப்படைக்க உள்ளோம். நீங்கள் அதிகாரப்பூர்வமாக இங்கே வரவில்லை. விசாரணையில் உங்களுடன் பேசிக்கொண்டு இருப்பது என் நேரத்திற்குச் சரியாக வராது!"
நிக்கோலஸ் முடிவாக நெகட்டிவ் பதிலைக் கூறினார்.
"தாங்க்ஸ் அண்ட் குட்விஷஸ்!" சொல்லிவிட்டு இனியா கிளம்பி வெளியே வந்தார்."
நினைவுகள் பின்னால் மெதுவாக நகர்ந்தன.
"ஆன்ட்டி... உங்களை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் மட்டும் இல்லைன்னா எங்கம்மா இப்போ இருக்கிற 'ஸ்டைல் அண்ட் சக்சஸ்' பார்த்திருக்க வாய்ப்பே இல்லீங்க! ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று நினைக்கிறேன்!”
-அமெரிக்கா கிளம்பும் முன்பு இந்தியா - தமிழ்நாடு கோவை ஓடக்கல்பாளையம் - செம்பூ தோட்டத்தில் போன பொங்கல் அன்று பார்த்த சில்வியாவின் சிரித்த முகம் ஆகியவை இனியாவின் நினைவுக்கு வந்தன.
இந்தியா - தமிழ்நாடு... திருப்பூர் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டராக வாழ்க்கையைத் தொடங்கிய காவல் அதிகாரி இனியா. காவல் துறைக்கு வந்ததே ராதிகாவால்தான்.
முதலில் காவல் பணிக்குத் தேர்வானது ராதிகா. அந்தக் காலத்தில் வைஜெயந்தி ஐ.பி.எஸ் போல ஒரே மோட்டிவேஷனாக இருந்த நாட்கள்.
இப்படிப் பழைய நினைவுகளோடு கேம்பிரிட்ஜ் பார்க்கில் சிமென்ட் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தவரின் கவனத்தைப் பக்கத்தில் யாரோ வந்து அமர்ந்தது அந்தப் பக்கம் திருப்பியது.
அவன் ஓர் உயரமான அமெரிக்கன். 225 பவுண்டு இருப்பான். சூயிங்கம் ஒன்றை சாவகாசமாக மென்றுகொண்டு, அந்த லொகேஷனுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாமல் தெரிந்தான்.
காலை 11 மணி இருக்கலாம். மேப்பிள் மரங்கள் வானுயர இருக்க, இப்போது இனியாவிற்கு எதிரே இருந்த பப்ளிக் சாய்வு பெஞ்ச்சில் இன்னும் இரண்டு பேர் உற்பத்தியாகியிருந்தனர்.
இனியாவிற்கு மட்டும் கடவுள் முதுகில் கண்கள் கொடுத்திருந்தார். பின்னால் ஒரு நர மாமிச காண்டாமிருக மனிதன் நிற்பது தெரிந்தது.
இனியாவிற்கு இப்போதுதான் திருப்தியாக இருந்தது. எந்தப்பக்கமுமே நகராமல் இருந்த கேஸில் ஏதோ பிடி கிடைத்திருப்பதாக அவரது உள்மனம் சொல்லியது.
"தின்னவரும் புலியையும் அன்போடு சிந்தையில் கும்பிடுவாய் நம் அன்னை பராசக்தி அவ்வடிவாயிள் அவளைப் போற்றிடுவாய்..."
மகாகவியின் வரிகள் இனியாவின் மனதில் ஓட, அவர் இலக்கியத் தரமான சம்பவம் செய்தார்.
காண்டாமிருகம் ஆங்கிலத்தில் பேசியது இதுதான்... "அதான் நிக்கோலஸ் பார்த்துக்கிறேன்னு சொல்லியாச்சில்ல... இனி, அப்படியே ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதானே? இல்ல, சில்வியா போன இடத்துக்குப் போகணும்னா, டிக்கெட் என்னிடம் தான்... இரு..".
அவனால் வார்த்தைகளை முடிக்க முடியவில்லை. இனியா எப்போது தன் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோன் ஸ்டைலஸை எடுத்தார்... எப்படி அவன் குரல் வந்த திசையை வைத்து, அந்த ஸ்டைலஸை இயக்கி, கரோடிட் தமனிக்குப் பின்னால் சிவனே என்று சென்றுகொண்டிருந்த வேகஸ் கபால நரம்பை அழுத்தினார்... தெரியாது!
அவனது பத்தாவது கபால நரம்பு அனுப்பிய சிக்னல் அவனது ஜீரண மண்டலம் முதல் இதயம் வரை ஸ்தம்பிக்க செய்தது. எப்போது அவரது பின் கை தலையின் எஸ் ஜாயின்ட்டைத் தட்டியது... ஆக்ஸிபிட்டல் போனும் அட்லஸ் போனும் தங்கள் வலியை எப்படி அவனுடைய கார்டெக்ஸுக்கு அனுப்பி மூளையை அரை செகண்ட் அலங்கோலப்படுத்தின என்று தெரியவில்லை.
அவருக்கு எதிரே இருந்தவர்கள்...
"ஏஏஏஏ...ய்ய்ய்"
இனியாவின் வேகத்தால் அவர்களால் சத்தம் போடவும் முடியவில்லை. கம்பனின் ராமன் வில்லை தொட்டதும் உடைந்த சத்தம் கேட்டதுபோல், மீதம் மூன்று பேரும் ஓட ஆரம்பித்தார்கள்.
ஸ்லோமோஷனிலேயே ஸ்பீடாகத் தெரியும் வேகத்தில் இனியா துரத்தினார்.
அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அவர்கள் பார்க்குக்கு வெளியே தயாராக நின்றிருந்த பைக்குகளில் தொற்றிப் பறந்தனர்.
இனியா வீழ்ந்தவனைப் பார்க்கத் திரும்பினார்.
அப்போது அவனது கழுத்து ரத்தக் குழாயை சாவகாசமாக ஒருத்தன் வெட்டிவிட்டு அவசரமாக ஓடுவது தெரிந்தது. அவன் கழுத்தில் பின்புறம் சிவப்பு உதடுகள் டாட்டூ இருந்தது.
இனியாவிற்குத் தன்னைச் சுற்றி ஒரு டீமே வேலை பார்ப்பது தெரிந்தது. அவர்கள் ஏன் தொலைவிலிருந்து துப்பாக்கியால் சுடவில்லை? தான் துரத்தி ஓடாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்தவண்ணம், மயக்கத்தில் போய்க்கொண்டிருந்த தடியனை நெருங்கினார். கைகளில் அமெரிக்க ரத்தம் கறைபட, கைவிரல்களால் உதிரத்தை நிறுத்த முயற்சி செய்தார்.
அவனை, "யார் நீ... யார் நீ..?” என்று கேட்டுப் பேச வைக்க முயன்றார்.
'எலெக் லிஸ்' துவள்கின்ற அவனது தலை தொங்கிப் போக, அந்த பார்க் பெஞ்சில் தன் உடம்பைக் கோணல் மாணலாகச் சரித்து பார்க் செய்து விழுந்திருந்த அந்த அபாக்கியசாலி உச்சரித்த அந்த இரண்டு சத்தங்கள்...
'எலெக் லிஸ்'
இதன் பொருள் என்னவாக இருக்கும்?!
What's Your Reaction?

