Test movie Review: மாதவனின் டெஸ்ட் திரைப்படம் எப்படி இருக்கு? குமுதம் திரைவிமர்சனம்

மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் (Netflix) வெளியாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். இப்படம் குறித்த குமுதம் விமர்சனம் இதோ..

Apr 7, 2025 - 16:28
Test movie Review: மாதவனின் டெஸ்ட் திரைப்படம் எப்படி இருக்கு? குமுதம் திரைவிமர்சனம்
Test movie Review

அமெரிக்காவில் இரண்டு டாக்டர் பட்டம் வாங்கிய மாதவனுக்கு, தன் சொந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பை உலகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசை, லட்சியம். அப்படி தண்ணீரில் இயங்கும் ஓர் இன்ஜினையும் கண்டுபிடித்து விடுகிறார். அதற்கான தயாரிப்பு உரிமையையும் அனுமதியையும் அரசிடம் பெறுவதற்கு கந்து வட்டிக்காரனிடம் 50 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். ஆனாலும் வேலை முடியவில்லை. கடன்காரனோ பணத்தைக் கேட்டு வீட்டுக்கு வந்து மிரட்டுகிறான்.

இதற்கு மத்தியில் பள்ளி ஆசிரியையான மாதவனின் மனைவி நயன்தாராவுக்கு 'தனக்கு குழந்தை இல்லையே என்கிற கவலை. அதற்கான சிகிச்சைக்கு 5 லட்சம் ரூபாய் உடனடியாக வேண்டும். அதையும் அவர் மாதவனிடம் கேட்கிறார். இப்படி பணச் சிக்கலிலும், லட்சியக் கனவிலும் தவிக்கும் மாதவன், வேறு வழி இல்லாமல் பிரச்னைகளை சமாளிக்க, தன் மனைவியின் பள்ளித் தோழனும், பிரபல கிரிக்கெட் வீரருமான சித்தார்த்தின் மகனைக் கடத்தி விடுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

நடிப்பில் அமர்க்களப்படுத்தும் மாதவன்:

கிரிக்கெட் பின்புலத்தில் ஒரு கிரைம் அண்ட் சென்டிமென்ட் ஸ்டோரி. நடிப்பில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் அமர்க்களப்படுத்துகின்றனர். ஒளிப்பதிவு பிரமாண்டம். சக்தி ஸ்ரீகோபாலனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம். தயாரிப்பாளரும் இயக்குநருமான எஸ்.சஷிகாந்த் மேக்கிங்கில் மிரட்டுகிறார்.

ஒரே மைனஸ், விஞ்ஞானி மாதவன் தன் லட்சியத்தை நிறைவேற்ற மனைவியின் நண்பருடைய குழந்தையையே கடத்துவது நம்பும்படி இல்லை. மொத்தத்தில் “டெஸ்ட் - வேகம் போதவில்லை”. டெஸ்ட் திரைப்படம் ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு,தமிழ் போன்ற மொழிகளிலும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow