வேம்பின் கீழ் சிரித்த அம்மன்... கஷ்டங்களைப் போக்கும் வேம்புலி அம்மன்!
வேம்பின் கீழ் சிரிப்பொலியுடன் தோன்றிய மகா ஆதி வேம்புலி அம்மன் கோயிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் நவநாகர் வழிபாட்டின் நம்பிக்கைகளும் இத்தொகுப்பில் காண்போம்.
ஜெயாப்ரியன்
வேம்புன்னு சொன்னாலே படை நடுங்கும். ஆனா,ஒரே இடத்துல ஒன்பது பாம்புகள் வட்டமா இருக்க, அதை பக்தர்கள் பய பக்தியோட சுத்தி | வழிபடறாங்கன்னு சொன்னா, ஆச்சரியமா இருக்கு இல்லையா?
வேம்புனு சொன்னா, உடனே கசப்புதான் நினைவுக்கு வரும் ஆனா, அதையே தன் பெயரா வைச்சுகிட்டு ஒரு அம்மன், தன்னை நாடி வர்ற பக்தர்கள் வாழ்க்கையை இனிக்க வைக்கிறான்னா, அந்த அம்மன் பெரிய வரப்பிரசாதியாகத்தான் இருப்பான்னு தோணுதுதானே?
இராமபிரான் அவதார புருஷனாக இருந்தாலும் அவருடைய மகன்களான லவனும் குசனும் சர்ப்ப தோஷத்தால பாதிக்கப்பட்டதும், அதுக்காக அவங்க பரிகாரம் தேடி அலைஞ் சாங்கன்றதும் கேட்கவே ஆச்சரியமாகத்தானே இருக்கு? இப்படிக் கேள்விகளாகவே அடுக்கிக்கொண்டுபோவதை இதோடு நிறுத்திக் கொண்டு, இந்த அத்தனைக்கும்.ஊஹூம். அதற்கு மேலும் பல அற்புதங்கள் நிறைந்த அம்மன் கோயிலுக்குப் போவோம் வாருங்கள். வந்தாள் மகாசக்தியே! இன்றைய சென்னையின் பரபரபான இடங்கள் பலவும், பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்து, காற்றும் நீரும் சுத்தமாக இருந்தன.
அப்படிப் பசுமையும் அமைதியும் நிறைந்து சோலைவனமாகக் காட்சி தந்த தலம் ஒன்றில் இருந்து அடிக்கடி யாரோ விசும்பி அழும்குரல் கேட்டது. விருட்சங்கள் நிறைந்திருந்த அந்தச் சோலையில் விளையாட வந்த குழந்தைகள் முதல், வியர்வை வழிய ஓய்வெடுக்க வந்தவர்கள்வரை அத்தனைபேரும் அந்தக் குரலைக் கேட்டார்கள். ஆனால், அது யாருடைய குரல் என்றே யாருக்கும் தெரியவில்லை. காரணம், குரல் வந்த இடத்தில் யாருமே இல்லை.
இதனால் அழகான சோலையின் குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் யாருமே வருவதைத் தவிர்த்தார்கள். அந்தக் குரல் யாருடையது என்பதும், அதன் காரணம் என்ன என்பதும் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரிந்திருந்தது. அவர், அம்பிகை பராசக்தி. இந்த உலகில் உள்ள தாவரம் முதல் சகல ஜீவன்களுக்கும் தாய் அல்லவா அவள்? அந்த அழுகை ஒரு மரத்தினுடையது. அதுவும் வேப்பமரத்தினுடையது. அதன் வருத்தத்துக்குக் காரணம் அங்கே சுற்றிலும் நிறைந்திருந்த மற்ற எல்லா மரங்களும் செடிகளும் பழங்களும் பூக்களும் தருவனவாக இருந்ததால், பலரும் அவற்றைச் சுற்றி வந்தார்கள். அமர்ந்தார்கள், விளையாடினார்கள். கலகலப்பாக இருந்தார்கள்.
ஆனால், வேப்பமரத்தின் அருகே யாருமே வரவில்லை. அதற்குக் காரணம், கடவுள் தன்னைக் கசப்பாகப் படைத்ததுதான் என்று நினைத்தது அந்த மரம். அதனால்தான், தினம் தினம் ஏங்கியது. அழுதது. தரு என்றாலும் அதற்கு வரம் தருவதற்கு உரிய நாள்வரை காத் திருக்கத்தானே வேண்டும்? காத்திருந்த மரத்துக்கு காலம் கனிந்தது. அன்றைய தினம், வழக்கத்துக்கு மாறாக அந்த மரத்தின் உடல் அதிர்ந்தது, குலுங்கியது.
'புயலாக இருக்குமோ? திகைப்புடன் கிளை நீட்டிப் பார்த்தது மரம். ஊஹூம். மற்ற எல்லா மரங்களும் இலைகூட அசையாமல் இருந்தன. வேப்பமரத்துக்கு கிலி பிடித்துக் கொண்டது. ஒருவேளை, ஓவராக அழுது உடம்பைக் கெடுத்துக் கொண்டுவிட்டோமோ? என்றெல்லாம் யோசித்தது. சரியாக அதேசமயம், அதன் கீழே இருந்து கலகலவென்று சிரிப்பொலி எழுந்தது. அழகான பெண் குழந்தை சந்தோஷமாகச் சிரிக்கும் ஒலி!
தன்னைத் தேடியும் ஒரு குழந்தை விளையாட வந்திருக்கிறதா? அச்சத்தை ஒதுக்கிவிட்டு ஆனந்தத்துடன் லேசாக குனிந்தது அந்த வேப்பமரம். அப்போது வேர்ப்பகுதியில் பூமி லேசாகப் பிளந்தது. உள்ளே இருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. அது ஓர் அம்மன் சிலை. மார்புவரை மட்டுமே இருந்த அந்தச் சிலையில் இருந்துதான் சிரிப்புச் சத்தம் வந்தது.
கொஞ்சம் தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கும் அது கேட்டது. அழுகுரல் கேட்ட இடத்தில் இருந்து சிரிப்பொலியா?
ஓடி வந்தார்கள். பார்த்தார்கள். வேம்பின் கீழ் தோன்றியிருந்த சிலை சிரிப்பதைக் கண்டார்கள். ஓடோடிப் போய் பெரியவர்களிடம் சொன்னார்கள். அவர்களும் வந்தார்கள்.பார்த்தார்கள்.
எல்லோரும் வந்ததும், அசரீரி எழுந்தது. "சோழதேசத்து அம்பிகை நான். ஐந்து குலத்தவரின் குலதேவதை. பலகாலமாக மண்ணுள்ளே மறைந்திருந்த நான் இன்று விரும்பி வெளிப்பட்டிருக்கிறேன். என்னைத் தொழுவோரின் இன்னல்கள் இல்லையாகும். தொல்லைகள் தொலைந்துபோகும் என்னை அனுதினமும் வேண்டிய இந்த வேம்பின் பெயரை என் பெயராக வையுங்கள்!" சொன்னாள்.
அம்பிகை சொன்னது காதில் கேட்டதும், வந்தாள் மகாசக்தியே!" என்று வேம்பு மனதுக்குள் மகிழ்ந்தது. சிலிர்த்தது... 'ஜில்' என்று காற்று வீசியது.!பரவசத்தில் அதன் உடலிலிருந்து பால் வடிந்தது!
அந்த வேம்பின் கீழேயே சிறு கொட்டகை அமைத்து அம்மனை இருத்தினார்கள், மக்கள். வேம்பின் கீழ் சிரிப்பொலி எதிரொலிக்கத் தோன்றியவள் என்பதால் வேம்பொலி அம்மன் என்று அழைத்தார்கள். வணங்கினார்கள்!
துறவு உறவு அரவு
இராமாயண காலகட்டம். ஸ்ரீராமர் அஸ்வமேத யாகம் செய்ததும், அதற்காக வலம் வந்த அஸ்வத்தை லவனும் குசனும் கட்டிப்போட்டதும் குமுதம் பக்தியின் வாசகர்களான உங்களுக்குத் தெரிந்த கதைதான். அந்த சமயத்தில் யாக குதிரையை மீட்க வந்த லக்ஷ்மணனுடன் லவனும் குசனும் போரிட்டார்கள் அல்லவா? அதனால் அவர்களை ஒரு தோஷம் பற்றிக்கொண்டது. அந்த தோஷம், சர்ப்ப தோஷம். அது எப்படி லக்ஷ்மணனுடன் சண்டைபோட்டால் சர்ப்ப தோஷம் பிடிக்கும் என்று கேட்பவர்களுக்காக சுருக்கமாக.
பகவான் விஷ்ணு, ராம அவதாரம் எடுக்கப்போவதாகத் தீர்மானித்ததுமே, அவருடன் யாரெல்லாம் கூட வரப்போகிறார்கள் என்று கேள்வி எழுந்தது. அப்போது அவரைவிட்டு எப்போதும் பிரியாமல் இருக்கக் கூடிய ஆதிசேஷன், இராமரின் இளையோன் லக்ஷ்மணனாக அவதாரம் எடுப்பது என்று தீர்மானமானது. அரவம் ஆகிய ஆதிசேஷன் தான் லக்ஷ்மணன். அதனால்தான் அவனை அஸ்திரங்களால் அடித்ததால், லவ குசனுக்கு சர்ப்ப தோஷம் வந்தது. அந்த தோஷம் பிடித்தால் அதைத் தீர்ப்பவர் யார்? வால்மீகி முனிவர் சொன்னார், "எந்த ஊருக்கும் எல்லை தெய்வமாக கிராம தேவதையாக ஓர் அம்மன் இருப்பாள். அவளைக் கும்பிட்டால், உங்கள் தோஷம் தீரும்"
குசனும் லவனும் அப்போது வசித்த வால்மீகி ஆஸ்ரமம் இருந்த தலம், குசலவபுரி. அவர்கள் வழிபட்ட கிராமத்து தேவதை தான் இந்த வேம்பொலி அம்மன்.
இராமாயண காலத்தில் அவளுக்கு என்ன பெயரோ; ஆனால், கால மாற்றத்தில் பூமிக்குள் புதைந்தவள் (சீதையின் மகன்கள் வழிபட்ட தாய், சீதையைப் போலவே பூமிக்குள் புதைந்ததில் ஆச்சரியம் என்ன?
உரிய காலத்தில் வேம்பின் கீழ் இருந்து வெளிப்பட்டாள். அப்போது, குசலவபுரி, கோயம்பேடு என்று மாறியிருந்தது. அந்த கிராமத்தின் எல்லையான விருட்சம்பாக்கம் விருகம்பாக்கம் ஆகியிருந்தது.வேம்பின் கீழ் இருந்து சிரிப்பொலியுடன் வந்தவள் என்பதால், வேம்பொலி என்று மக்கள் அழைத்த அன்றைய பெயர் இன்று, மருவி வேம்புலி அம்மன் என்றாகியுள்ளது. இவளே இப் பகுதியின் ஆதிகால நாயகி என்பதால், மஹா ஆதி வேம்புலி அம்மன் என்றழைக்கிறார்கள். கொட்டகை, கோயிலாக மாறியபோது, கழுத்துவரையிலான சுயம்பு உருவத்தோடு, முழு உருவம் உள்ள தேவியின் சிலையும் இடம்பிடித்திருக்கிறது.
மூன்று நிலை ராஜகோபுர வாயிலின் வலமும் இடமும் கணபதியும் கந்தனும் இருக்க, வணங்கிப் படியேறி உள்ளே சென்றால், பலிபீடம், கொடிமரத்தை அடுத்து சிம்ம வாகனம் சிலிர்த்தபடி காட்சிதருகிறது. மகாமண்டப முகப்பில் எட்டு ஊர் அம்மன்களின் சுதைச் சிற்பங்கள் எழிலாக அமைக்கப்பட்டுள்ளன.
கருவறையில் வேம்பின் பெயரைத் தான் தாங்கிக் கொண்டு, வேண்டிவரும் பக்தர்களின் வாழ்வை இனிக்கச் செய்யும் அருளரசியாக, அழகே உருவாக அருளே வடிவாகக் காட்சிதருகிறாள், மகா ஆதிவேம்புலி அம்மன். பகலவன் உதிக்கும் திசை நோக்கி இருக்கும் அம்மனை தரிசிக்கும்போது, நம் வாழ்வில் வெளிச்சம் வரும். என்பதை உணரமுடிகிறது. கருவறை முன் நிற்கும்போது உங்களை அறியாமல் கண்ணீர் வழிந்தால், அதைத் துடைக்காதீர்கள். அது உங்கள் கஷ்டங்களை அன்னை கரையச் செய்வதன் அடையாளம்.
வேம்பின் கீழிருந்து தோன்றிய தேவியின் வடிவம், அம்பிகையின் பீடத்துக்கு முன்பாக வைக்கப்பட்டு முதல்பூஜை பெறுகிறது. உளியினால் செதுக்கிய அடையாளமே இல்லாமல் வழுவழு என்று காட்சிதரும் அந்தச் சிலை, ஒருவித மருந்துக் கலவையைப் பயன்படுத்தி, கல்லில் இருந்து தேவையில்லாத பாகங்களைக் கரைத்துச் செய்யப்பட்டது என்றும், யாரோ ஒரு சித்தர்தான் இதை அமைத்திருக்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.
மகாமேரு ஸ்தாபிக்கப்பட்ட கருவறை என்பதால், மந்திர, யந்திர, தந்திரங்களால் செய்யப்பட்ட தீவினைகள் எதுவும் இந்த எல்லையில் வந்தாலே விலகி ஓடிவிடும் என்பது ஐதிகம்
குழந்தைச் சிரிப்புடன் தோன்றியவள் என்பதால் குழந்தைவரம் வேண்டி இவளை வணங்குவோர் ஏராளம். அதோடு, மருத்துக் கலவையால் உருவாக்கப்பட்ட தேவியாதலால், மனப்பிணியும் உடற்பிணியும் நீக்கிடும் மருந்தாகவும் இவளே திகழ்வதாகச் சொல்கிறார்கள் பலனடைந்த பக்தர்கள்.
பிராகாரத்தில் கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யன், வைஷ்ணவிதேவி, சப்தமாதர்கள், அனுமன் சன்னதிகள் இருக்கின்றன. அனுமனின் வாகனமான ஒட்டகம், அவர் சன்னதி விமானத்தில் இருப்பதை மறக்காமல் பாருங்கள். ஜமதக்னி முனிவருக்கும் அவர் மைந்தன் பரசுராமருக்கும் சன்னதிகள் உள்ளன. எண்கோண பீடத்தில் நவகிரஹங்கள் வீற்றிருப்பது வித்தியாசம்.
மகாமண்டபத்தின் உள்ளே அஷ்டதிக் பாலர்கள் அவரவர்க்கு உரிய திசையில் தனித்தனி சன்னதியில் காட்சியளிக்கின்றனர். விதானத்தில் இருபத்தேழு நட்சத்திரம், பன்னிரு ராசிகள் அமைந்த சக்கரம் காணப் படுகிறது. அவரவர்க்கு உரிய நட்சத்திரத்தின் கீழ் நின்று அம்மனை வணங்குவது கூடுதல் சிறப்புதரும் என்கிறார்கள். கூடவே அஷ்டலக்ஷ்மியர் தரிசனமும் கிடைக்கிறது.
கருவறைக்குப் பின்புறம் நவநாகர்கள் சன்னதி வித்தியாசமான அமைப்பில் காணப்படுகிறது. அந்த சன்னதியில் உள்ள அனந்தன், வாசுகி, குளிஜன், குஷகாயன், கார்கோடகன், அப்ஜன்,மகரி அப்ஜன்,பத்மன், கங்குபாலன் ஆகிய ஒன்பது பாம்புகளைத்தான், பக்தர்கள் பயபக்தியுடன் சுற்றி வருகிறார்கள். ராகு, கேது தோஷங்கள் மட்டுமன்றி, காலசர்ப்ப தோஷம் உள்ளிட்ட அத்தனையும் இந்த நாகர்களை வலம் வந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை.
(மூலவரான மகா ஆதிவேம்புலி அம்மனின் திருவடியில் வைத்தும், அதன் பின்னர் இந்த நவ நாகர்கள் சன்னதியிலும் அடுத்து ராகு, கேதுவின் முன்பும் வைத்து பூஜிக்கப்பட்ட காலசர்ப்ப யோக யந்திரமே இந்த இதழுடன் இணைப்பாகத் தரப்பட்டிருக்கிறது. யந்திரத்தின் சிறப்பு, அதை எப்படி பூஜிப்பது எல்லாம் விவரமாக 6 ஆம் பக்கத்தில் படித்துவிட்டீர்கள்தானே? பூஜையையும் கோயிலின் சிறப்பையும் குமுதம் பக்தி யூடியூபில் பாருங்கள் பூரண பலன் கிடைக்கும்)
அம்பிகைக்கே உரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தக் கோயிலில் நவராத்திரி விழாவே பிரமோற்சவமாக நடத்தப்படுகிறது. அம்பிகை வேம்பின் கீழ் குழந்தை வடிவில் சிரிப்பொலியுடன் தோன்றியது ஒரு நவராத்திரி சமயத்தில்தான் என்கிறார்கள்.
வேம்பின் கசப்பான கண்ணீரையே துடைத்தவள் என்பதால், தங்கள் வாழ்விலும் கசப்பான கஷ்டங்களைப் போக்கி இனிமையை இடம்பெறச் செய்வாள் என்ற நம்பிக்கையோடு இங்கே வருகிறார்கள் பக்தர்கள். அந்த நம்பிக்கையை நிஜமாக்குகிறாள், மகா ஆதி வேம்புலி அம்மன். அதனை நீங்களும் உணர்ந்திட, ஒருமுறை நேரில் சென்று தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்வும் இனிக்கும் மணக்கும்.
படங்கள்: கஸ்தூரி
What's Your Reaction?