ஸ்டாலினை உருவக்கேலி செய்தேனா? விளக்கமளித்த முதலமைச்சர் விஜய்..!

மிசாவில் என்ன நடந்தது என்று தெரியும் என சட்டப்பேரவையில் பேசியபோது அவர் செய்த சைகை சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

Sep 8, 2026 - 18:33
ஸ்டாலினை உருவக்கேலி செய்தேனா? விளக்கமளித்த முதலமைச்சர் விஜய்..!

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், தற்போதைய பிரச்னைகளுக்கு கடந்த சில மாத ஆட்சியை மட்டுமே காரணமாகக் கூற முடியாது என்றார்.

நீண்ட காலமாக தமிழ்நாட்டில் நிலவி வரும் சில பிரச்னைகளுக்கும் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விஜய் தெரிவித்தார். அதன்பிறகு, பேச்சு திமுகவை நோக்கித் திரும்பியது. திமுக ஆட்சிக்காலத்தில் எழுந்ததாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்கள், சர்க்காரியா கமிஷன், மிசா உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி விஜய் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மிசாவில் என்ன நடந்தது என்று தெரியும்...” என்று குறிப்பிட்டார். அப்போது அவரது முகத்தை நோக்கி கையை வைத்து ஒரு சைகை செய்தார். 

அவ்வளவுதான்...விஜய் பேசிய வார்த்தைகளைவிட, அந்த சைகைதான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. அந்த சைகை எதைக் குறிக்கிறது? ஸ்டாலினை கேலி செய்யும் நோக்கத்தில்தான் விஜய் அதை செய்தாரா? அல்லது பேச்சின் தீவிரத்தில் தன்னிச்சையாக வெளிப்பட்ட உடல்மொழியா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

ஒருதரப்பினர், மிசா காலத்தில் ஸ்டாலின் சிறையில் இருந்தபோது எதிர்கொண்டதாகக் கூறப்படும் துன்பங்களை கேலி செய்யும் வகையிலேயே அந்த சைகை அமைந்துள்ளது என்று விமர்சித்தனர். மற்றொரு தரப்பினரோ, சில நொடிகள் மட்டுமே இடம்பெற்ற உடல்மொழியை வைத்து விஜயின் நோக்கத்தை முடிவு செய்ய முடியாது என தெரிவித்தனர். 

இன்னும் சொல்லப்போனால், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், விஜய்யின் இந்த சைகையை கடுமையான விமர்சித்துள்ளனர். 
 
இத்தகையச் சூழலில், சட்டப்பேரவையில் விஜய் திமுகவை விமர்சிக்கும் விதம் தொடர்ந்து அரசியல் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ஸ்டாலினை குறிவைத்து அவர் பயன்படுத்திய சில வார்த்தைகளும் அரசியல் ரீதியாக விவாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது அந்த சைகையும் சர்ச்சையில் இணைந்துள்ளது. ஆனால், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயே விளக்கம் அளித்துள்ளார்.

 “சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம்” என்றும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதாவது, அந்த சைகை திட்டமிட்டதல்ல... யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் நோக்கமும் இல்லை என்பதே விஜயின் விளக்கம்.

ஆனாலும், அரசியல் களம் அவ்வளவு எளிதில் ஓய்வதாகத் தெரியவில்லை. அது கேலியா? கோபத்தின் வெளிப்பாடா? தன்னிச்சையான உடல்மொழியா? விஜய் விளக்கம் அளித்துவிட்டார். ஆனால், சட்டப்பேரவையில் சில நொடிகளில் நடந்த அந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் எழுப்பிய விவாதம் மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow