துணை நடிகை விருதுக்கு எப்படி செலக்ட் பண்றீங்க? கொதித்தெழும் ஊர்வசி
2023 ஆம் ஆண்டிற்கான துணை நடிகைக்கான தேசிய விருது ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ”முதன்மை கதாபாத்திரமாக நான் நடித்துள்ள போது, எதன் அடிப்படையில் துணை நடிகை விருது வழங்கியுள்ளார்கள்?” என கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஊர்வசி.

2023 ஆம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக கேரளா திரையுலகில்.
’உள்ளொழுக்கு’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுக்கு ஊர்வசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பிரபல மலையாள ஊடகம் ஒன்றில் விருது வழங்கப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகளை தேசிய விருது தேர்வாணைய குழுவினை நோக்கி எழுப்பியுள்ளார் ஊர்வசி.
கிறிஸ்டோ டாமி இயக்கிய 'உள்ளொழுக்கு' படத்தில், ஊர்வசி லீலம்மா என்ற விதவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மகனை இழந்த தாயாக, மருமகளின் எண்ணத்திற்கு துணையாக என படம் முழுவதும் ஸ்கோர் செய்திருந்தார் ஊர்வசி.
எதன் அடிப்படையில் துணை நடிகை விருது?
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட துணை நடிகைக்கான விருது குறித்து ஊர்வசி பேசுகையில், “துணை நடிகைக்கான விருதுக்கு முன்னணி கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால், உண்மையான துணை நடிகை கதாபாத்திரங்களுக்கு என்ன கிடைக்கும்? முன்னணி நடிகரா? அல்லது துணை நடிகரா? என்பதை தீர்மானிக்க அவர்களது நடிப்பை தேசிய விருதுக்கான தேர்வு குழு எவ்வாறு அளந்தார்கள்?
2005 ஆம் ஆண்டு அச்சுவின்டே அம்மா படத்திற்காக 'சிறந்த துணை நடிகை' விருதை வென்றபோதும், இதேபோன்ற அனுபவத்தை எதிர்கொண்டேன். தென்னிந்தியாவில் பல திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். நாம் இப்போது குரல் எழுப்பவில்லை என்றால், அவர்கள் இந்த அங்கீகாரங்களைத் தவறவிடுவார்கள்.”
ஆடுஜீவிதம் படத்திற்கு ஏன் புறக்கணித்தார்கள்?
”தேசிய விருதுகள் திறமைக்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும், வேறு எதன் அடிப்படையிலும் அல்ல. எனக்கு விருதுகள் மீது ஆசை இல்லை, ஆனால் அவை நம்மை தேடி வரும்போது நாம் நன்றாக உணர வேண்டும், இப்படி புலம்ப வைக்கக்கூடாது. பிரித்விராஜ் நடிப்பில் உருவாகிய ஆடுஜீவிதம் படத்தினை எவ்வாறு தேர்வுக்குழுவினால் புறக்கணிக்க முடிந்தது? எம்பூரான் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளால் தான் ஆடுஜீவிதம் படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்பது நமக்கு தெரியும். விருதுகள் அரசியல் ரீதியாக அறிவிக்கப்பட கூடாது.
'நடிப்பதற்கு ஏதேனும் தரநிலை உள்ளதா? அல்லது ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, இதை மட்டும்தான் (துணை நடிகை விருது) பெறுவீர்களா? இது அமைதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓய்வூதியத் தொகை அல்ல. இந்த முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? என்ன அளவுகோல்கள் பின்பற்றப்படுகின்றன?' போன்ற என் கேள்விகளுக்கு தேர்வுக்குழுவின் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்” என ஊர்வசி தெரிவித்துள்ளார்.
எனக்கு பயமில்லை: ஊர்வசி
”தேசிய விருதுக்கான தேர்வுக்குழுவின் பதிலைப் பொறுத்து, விருது பெறுவதா? வேண்டாமா? என்கிற முடிவை எடுப்பேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லாததால், என்னால் பேச முடியும். நான் வரி செலுத்துகிறேன், எனக்கு எந்த பயமும் இல்லை. நான் இப்போது இந்த கேள்வியே எழுப்புவது கூட எனக்காக அல்ல, என் பின்னால் வரக்கூடிய கலைஞர்களுக்காக” என குறிப்பிட்டுள்ளார் ஊர்வசி.
ஏற்கெனவே கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தேர்வு குழுவினை கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






